மதிப்புக்கூட்டுப் பொருட்கள்
தயாரித்து சாதிக்கும் தம்பதி
நமக்கென்று சில பாரம்பரிய செல்வங்கள் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் நாட்டுமாடு. பல பாரம்பரிய மாட்டு இனங்கள் பெருகி வளர்ந்த தமிழ்நாட்டில் இப்போது பல நாட்டு இனங்கள் அழியும் தருவாயில் உள்ளன. இதனை உணர்ந்த இன்றைய இளம் தலைமுறை நாட்டு மாடு வளர்ப்பில் ஆர்வம் காட்டி வருகிறது. சென்னையை ஒட்டிய புறநகர்ப்பகுதியான ஆவடி அடுத்த திருநின்றவூரில் தமிழகத்தின் அடையாளமான காங்கேயம் மாடுகளைக் கொண்டு பண்ணை அமைத்து பராமரித்து வருகிறார்கள் சிந்துஜா – தினேஷ் தம்பதி. இந்தப்பண்ணையில் காங்கேயம் பசுக்களின் பால் மட்டுமில்லாமல், அதில் இருந்து நெய், தயிர், வெண்ணெய், பனீர் என அனைத்தையும் வீட்டில் இருந்தபடியே தயாரித்து லாபம் ஈட்டி, மாடு வளர்ப்பில் ஈடுபடும் பலருக்கு வழிகாட்டியாக இருக்கிறார்கள். பண்ணையில் மாடுகளுக்கு தீவனம் போட்டுக்கொண்டிருந்த சிந்துஜா, தினேஷ் தம்பதியை ஒரு காலைப்பொழுதில் சந்தித்தோம். புன்னகையோடு வரவேற்று பேசத்தொடங்கினார் சிந்துஜா.
“எங்களுக்கு பூர்வீகம் இதே ஊர்தான். எங்கள் குடும்பத்தில் அனைவருமே ஆசிரியர் என்பதால் என்னையும் ஆசிரியருக்குத்தான் படிக்க வைத்தார்கள். எம்.எஸ்.சி, எம்.பில் படித்து முடித்திருக்கிறேன். படிப்பு முடித்த பிறகு ஒரு தனியார் பள்ளியில் பணியில் இருந்தேன். ஒரே மாதிரியான பணி, ஒரே சூழல். ஒரு கட்டத்திற்கு மேல் சலிப்பு வந்தது. அதே நேரத்தில் சிறுவயதில் இருந்தே எங்களுக்கு கிராமத்து வாழ்க்கை வாழ வேண்டும் என்ற ஆசையும் இருந்தது. கிராமத்து வாழ்க்கை என்றால் வாழ்வுமுறை மட்டுமில்லை விவசாயத்தில் இருந்து கால்நடை வரை அனைத்தையுமே செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது. இந்த ஆசை மேலோங்கவே பார்த்துக் கொண்டிருந்த பணியை விட்டுவிட்டு மாடுகள் வாங்கி வளர்க்கலாம் என்ற எண்ணம் வந்தது. ஏனென்றால் மாடு வளர்ப்புதான் விவசாயத்தின் ஆரம்பக் கட்டம் என்பதால் அதன் பராமரிப்பு மற்றும் அவசியத்தை தெரிந்துகொண்டால் நன்றாக இருக்கும் என நினைத்தோம். இப்படித்தான் மாடு வளர்ப்புக்குள் வந்தோம்’’ என சிந்துஜா தங்களைப் பற்றி அறிமுகம் செய்துகொண்டதைத் தொடர்ந்து தினேஷ் விளக்கமாக கூறத் தொடங்கினார்.
“ மாடு வளர்ப்பு, பராமரிப்பு குறித்து எந்த அனுபவமும் இல்லை. ஆனால், மாடு என்ற முடிவானவுடனே நாட்டு ரக மாடுகள்தான் வாங்க வேண்டும் என்று முடிவெடுத்தோம். சென்னையிலும், ஆவடியிலும் உள்ள பல மாட்டுப்பண்ணைகளுக்கு நேரடியாக சென்று பார்வையிட்டோம். அவர்களிடம் மாட்டுப்பண்ணை தொடங்கப் போகிறோம் என சொன்னதும் அவர்கள் எங்களுக்கு பரிந்துரைத்தது குஜராத் மாநில நாட்டு மாடான கிர் இன மாடுதான். ஏனெனில், அந்த மாட்டில்தான் பால் அதிகம் கிடைக்கும். ஒருமுறை மாடு வாங்கினாலே போதும் ஒரு நாளைக்கு 10ல் இருந்து 15 லிட்டர் பால் கிடைக்கும். அதனால் அந்த மாட்டில்தான் லாபம் பார்க்கலாமென பரிந்துரைத்தனர். ஆனால், எனக்கு வெளிமாநில மாடுகள் வாங்குவதில் விருப்பமில்லை. நம்ம ஊர் பாரம்பரிய மாடுகளை வாங்க வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தோம். அதன்படி காங்கேயம் மாடுகளை வாங்கலாம் என முடிவெடுத்தோம்.
காங்கேயம் மாடுகள் வாங்குவதற்காக காங்கேயத்தில் நடக்கும் ஒரு மாட்டுச்சந்தைக்கு மட்டும் 4 முறை சென்றோம். அங்குதான் அசல் காங்கேயம் மாடுகள் விவசாயிகள் மூலம் நேரடியாகவே விற்கப்படுகிறது. அங்கே சிவக்குமார் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அவரின் மூலம் ஒரு வருடத்திற்கு முன்பு 2 காங்கேயம் பசுக்கள் வாங்கினோம். முதன்முதலில் வாங்கிய காங்கேயம் மாடுகள் அவைதான். அதைத் தொடர்ந்து இந்த ஒரு வருடத்தில் மட்டும் 8 காங்கேயம் பசுக்கள் வாங்கி இருக்கிறோம். இப்போது எங்கள் பண்ணையில் 8 காங்கேயம் பசுக்கள், ஒரு காங்கேயம் காளை, 8 காங்கேயம் கன்றுகளும் இருக்கின்றன. பண்ணை தொடங்குவதற்கு முன்பாகவே மாடுகள் வாங்குவதற்கே ஆறு மாதங்கள் அலைந்தோம். அப்படி அலைந்ததின் பயனாக இப்போது அசல் காங்கேயம் மாடுகள் கிடைத்திருக்கிறது.
காங்கேயம் பசுக்களைப் பொறுத்தவரை பால் கம்மியாகத்தான் கிடைக்கும். அதாவது, ஒரு மாடு ஒரு நாளைக்கு அதிகபட்சமாகவே 3 லிட்டர்தான் கொடுக்கும். அதேபோல, காங்கேயம் வளர்ப்பதும் கூட சவாலான விசயம். ஏனென்றால் காங்கேயம் பெரும்பாலும் யாருக்கும் அடங்காது. இவை எல்லாவற்றையும் சமாளித்துதான் இந்த மாடுகளை வளர்த்து வருகிறோம். நமது நாட்டு ரக மாடுகளில் இருந்து கிடைக்கும் பால் அதிக சத்து மிகுந்தது. அதே நேரத்தில் நல்ல ஆரோக்கியமாகவும் இருக்கும். அதனால் மக்கள் அதிக காசு கொடுத்தும் இந்தப் பாலை வாங்க விரும்புகிறார்கள் என்பதை தெரிந்து கொண்டேன். எனது பண்ணையில் இருக்கிற 8 மாடுகளில் 5 மாடுகள் இப்போது பால் கொடுக்கின்றன. இந்த 5 மாடுகளில் இருந்து ஒரு நாளைக்கு மட்டும் சராசரியாக 15 லிட்டர் பால் கிடைக்கிறது. நான் ஒரு லிட்டர் பாலை 150 ரூபாய்க்கு விற்கிறேன். காங்கேயம் பசும்பால் என்பதால் மக்கள் எனது பண்ணை பாலை வாங்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதிக காசு கொடுத்து தினமும் வாங்க முடியாதவர்கள் குழந்தைகளுக்கு மட்டும் கால் லிட்டர்,
அரை லிட்டர் என குறைந்த அளவும் வாங்குகிறார்கள். அவர்களுக்கும் கொடுத்து வருகிறேன். காங்கேயம் மாடுகளைப் பொறுத்தவரை கன்று ஈன்ற மூன்று மாதங்கள்தான் பால் கொடுக்கும். பிறகு அதனை இனப்பெருக்கம் செய்ய விட வேண்டும். இப்போது பலருமே மாடுகளுக்கு ஊசி முறையில்தான் சினை பிடிக்க செய்கிறார்கள். அவ்வாறு செய்தால் பிறக்கும் கன்றுகள் அவ்வளவு ஆரோக்கியமாக இருக்குமா என்று தெரியவில்லை. அதே நேரத்தில் காங்கேயம் மாடுகளுக்கு சினை ஊசி போடும்போது பிறக்கும் கன்றுகளும் அசல் காங்கேயமாக இருக்குமா? என்று தெரியவில்லை. அதனால் காங்கேயத்தில் காளை வாங்கலாம் என முடிவெடுத்தோம். மீண்டும் காளை வாங்குவதற்காக நண்பர் சிவக்குமாரை அணுகியபோது, நாங்கள் மாடு வளர்ப்பில் ஆர்வமாக இருப்பதைப் பார்த்து அவரே காங்கேயம் காளை ஒன்றை பரிசாக கொடுத்தார். அதனால் எனது பண்ணையில் இப்போது காளை ஒன்றும் கூடுதலாக இருக்கிறது. நாட்டுமாடுகளை வளர்க்க வேண்டும் என முடிவு செய்தவுடன், வளர்ப்பு முதல் விற்பனை வரையிலான பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து ஓரளவு கற்றுக்கொண்டேன். அதன் பயனாக எங்கள் பண்ணையில் கிடைக்கும் பாலை, விற்பனைக்குப் போக மீதம் இருப்பதை வைத்து வீட்டுத் தயாரிப்பிலே நெய், தயிர், வெண்ணெய், பனீர் என அனைத்தும் தயாரித்து விற்பனை செய்கிறோம்.
மாடு வளர்ப்பில் முக்கிய நோக்கமே அதை விற்பனை நோக்கத்தில் வளர்க்கக் கூடாது என்பதுதான். மாட்டில் இருந்து பால் உள்ளிட்ட சத்து மிகுந்த பொருட்கள் கிடைக்க வேண்டும் என்றால், அவற்றுக்கு சத்தான தீவனத்தைக் கொடுக்க வேண்டும். இதனை கருத்தில் கொண்டு, சத்துமிகுந்த சிறுதானிய தவுடுகளை வாங்கி வந்து மாடுகளுக்கு கொடுக்கிறோம். அரிசித்தவுடு, உளுந்தங் குருணை, துவரங்குருணை, பச்சப்பயிர் குருணை, பருத்திக்கொட்டை, மக்காச்சோள மாவு, கடலைப் புண்ணாக்கு, எள்ளுப் புண்ணாக்கு என அனைத்து தீவனங்களையும் சத்துமிகுந்ததாக வழங்குகிறோம். இந்தத் தீவனம் அனைத்தையும் கலந்து பால் கொடுக்கிற மாட்டுக்கு மூன்றில் இருந்து மூன்றரை கிலோ வரை கொடுக்கிறோம். பால் கொடுக்காத மாட்டிற்கு இரண்டரை கிலோ தீவனம் வைக்கிறோம். இந்த தீவனம் அனைத்துமே உடுமலைப்பேட்டையில் இருந்து வரவைத்து மாடுகளுக்கு கொடுக்கிறோம். இதுபோக பெரியபாளையத்தில் இருந்து பச்சைப்புல்லும் வாங்குகிறோம். ஒரு டன் புல் ரூ.4 ஆயிரத்திற்கு வாங்குகிறோம். மாதத்திற்கு 2 முறை வாங்குகிறோம். சராசரியாக பார்த்தால் ஒரு மாட்டிற்கு தீவனம் மட்டும் ஒரு நாளைக்கு 300 ரூபாய்க்கு கொடுக்கிறோம். அதுபோக, பச்சைப்புல், வைக்கோல் என அனைத்தும் கொடுக்கிறோம். ஒரு மாதத்தில் மட்டும் மாடுகளுக்காக ரூ.45,000ல் இருந்து 50,000 வரை செலவு ஆகிறது. இந்த செலவை சரிசெய்யும் அளவில் பால், தயிர், வெண்ணெய், நெய் போன்றவற்றின் விற்பனை இருக்கிறது. இப்போது வரை வரவும் செலவும் சரியாக இருக்கிறது. வரவை அதிகப்படுத்தி லாபம் ஈட்டுவதற்காக மாட்டு சாணங்களில் இருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கிறோம். அதன் விற்பனை பெரிதாகும் பட்சத்தில் பல மடங்கில் லாபம் கிடைப்பது உறுதி. பாலில் தண்ணீர் கலந்தாலோ அல்லது மாடுகளுக்கு கொடுக்கப்படும் தீவனத்தின் செலவை குறைத்தாலோ நல்ல லாபம் பார்க்கலாம்தான். ஆனால், அதை நாங்கள் விரும்பவில்லை. எங்களது வேலையை சரியாக செய்துவருகிறோம். கட்டாயம் பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை மட்டும் இருக்கிறது’’ என நம்பிக்கை பொங்க
பேசினார் தினேஷ்.
தொடர்புக்கு:
சிந்துஜா: 73972 72373
மதிப்புக்கூட்டுப் பொருட்கள்
மாடுகளில் இருந்து கிடைக்கும் முதன்மையான ஒன்று பால். அதைத்தவிர மாட்டின் சாணத்தில் இருந்தும் பல வகையான பொருட்கள் தயாரித்து மதிப்புக்கூட்டி விற்கலாம். அதாவது, எனது பண்ணையில் இருக்கிற மாடுகளின் சாணம் மற்றும் கோமியத்தை வைத்து திருநீறு, பஞ்சகவ்ய சாம்பிராணி, கொசு விரட்டி, சோப்பு, ஹேர் ஆயில், பற்பொடி போன்றவற்றையும் தயாரித்து வருகிறேன். இவை அனைத்துமே இயற்கை முறையில் தயார் செய்வதால் எந்த பக்க விளைவுகளும் இருக்காது. இதன் விற்பனை முறையை சரியாக தெரிந்து வைத்திருந்தால் இந்தப் பொருட்களில் இருந்தும் கூடுதல் வருமானம் பார்க்கலாம் என்கிறார்கள் சிந்துஜா-தினேஷ் தம்பதியினர்.
கோமாரிக்கு தீர்வு
கோமாரி நோய் தாக்கிய மாடுகளின் வாயில் உள்ள புண்களுக்கு கிளிசரின் அல்லது போரிக் அமில பவுடரை தேங்காய் எண்ணெயில் குழைத்து தினமும் 4 முறை தடவ வேண்டும். கால் புண்ணுக்கு தண்ணீரில் பொட்டாசியம் பர்மாங்கனேட்டு கலந்து கழுவிய பின் “லோரெக்சான்” களிம்பு தடவலாம். நாட்டு வைத்தியம் என்று பார்க்கும்போது பூண்டு 10 பல், மஞ்சள் தூள் 10 கிராம், துளசி, குப்பை மேனி, மருதாணி மற்றும் வேப்பிலை தலா 10 சேர்த்து அரைத்து ஒரு லிட்டர் நல்லெண்ணெயில் கலந்து 10 நிமிடம் காய்ச்ச வேண்டும். ஆறிய பின் இந்த எண்ணெயை தினமும் இருமுறை கால் புண்களில் தடவினால் விரைவில் குணமாகும்.