புதுடெல்லி: சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிய ஒரு வீடியோவில், கங்காரு ஒன்று விமான நிலையத்தில் டிக்கெட் பரிசோதனைக்காக தனது பயண ஆவணத்தை வைத்திருப்பது போலக் காட்டப்பட்டது. இந்த வீடியோவில், ஒரு பெண்ணும், விமான நிலைய ஊழியரும் வாக்குவாதத்தில் ஈடுபட, கங்காரு அமைதியாக நின்று கொண்டிருப்பதாகத் தோன்றியது. இந்தக் காட்சி பலரை ஆச்சரியப்படுத்தியது. சமூக வலைதளங்களில் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றது. ஆனால், இந்த வீடியோ உண்மையா அல்லது போலியா என்ற கேள்வி எழுந்தது. பலர் இது செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டதாக சந்தேகித்தனர்.
உண்மையில் இந்த வீடியோ செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது. ‘Infinite Unreality’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோ முதலில் பதிவேற்றப்பட்டது. இந்த பக்கம் வினோதமான ஏஐ உருவாக்க வீடியோக்களுக்கு பெயர் பெற்றது. இதனை நம்பகமான ஊடகங்களும் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த வீடியோவை பார்க்கும் போது, ஏஐ தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்தையும், அதன் உண்மைதன்மையைப் புரிந்து கொள்வதற்கு டிஜிட்டல் கல்வியறிவு எவ்வளவு முக்கியம் என்பதையும் எடுத்துக்காட்டுகிறது.