சண்டிகர்: விவசாயிகள் போராட்டத்தை தடுக்க தேசத்தின் தலைமை, வலுவான நடவடிக்கையை எடுக்காமல் போயிருந்தால் பஞ்சாப் மாநிலத்தை வங்கதேசமாக மாற்றி இருப்பார்கள் என பாஜக எம்.பி கங்கனா ரனாவத் கருத்து தெரிவித்திருந்தார். அவரது இந்த சர்ச்சை கருத்துக்கு பஞ்சாப் மாநில பாஜகவின் மூத்த தலைவர்களின் ஒருவரான ஹர்ஜித் கரேவால் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“விவசாயிகள் போராட்டம் குறித்து கங்கனா பேச வேண்டிய அவசியமில்லை. அவர் தெரிவித்தது அவரது தனிப்பட்ட கருத்து. பிரதமர் மோடியும், பாஜகவும் விவசாயிகளின் நண்பர்கள். எதிர்க்கட்சிகள் எங்களுக்கு எதிராக வேலை செய்து வருகின்றனர். அதைத்தான் கங்கனாவின் கருத்தும் தற்போது செய்துள்ளது. மதம், மதம் சார்ந்த அமைப்பு மற்றும் மிக முக்கிய விவகாரங்களில் அவர் கருத்து சொல்லாமல் இருப்பது நல்லது.” என ஹர்ஜித் கரேவால் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தனியார் ஊடக நிறுவனத்துடனான நேர்காணலில் கங்கனா, “விவசாயிகள் போராட்டத்தில் பாலியல் துன்புறுத்தலும் கொலைகளும் அரங்கேறின. மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றது. இல்லையென்றால் அவர்கள் நாட்டில் எதையும் செய்திருக்கக் கூடும். அது சார்ந்த திட்டங்களை அவர்கள் கொண்டிருந்தனர்.
விவசாயிகள் போராட்டத்தை தடுக்க தேசத்தின் தலைமை, வலுவான நடவடிக்கையை எடுக்காமல் போயிருந்தால் பஞ்சாப் மாநிலத்தை வங்கதேசமாக மாற்றி இருப்பார்கள். விவசாயிகள் போராட்டம் என்ற பெயரில் நடந்த குற்றங்கள் குறித்து தேசம் அறியாது. படுகொலை செய்து தூக்கிலிட்ட சம்பவங்களும் நடந்தன. வேளாண் சட்டங்களை அரசு திரும்பப் பெற்றது அவர்களுக்கு அதிர்ச்சி அளித்தது.” என தெரிவித்தார்.