புதுடெல்லி: கடந்த சில தினங்களுக்கு முன் கர்நாடகா மாநிலம் பெங்களூரு ஆட்டோ டிரைவர் கிரீஷ் என்பவரின் ஆட்ேடாவில் சித்ரா என்ற பெண் பயணம் செய்தார். குறிப்பிட்ட இடத்தில் அந்தப் பெண் இறங்கிவிட்டார். வழக்கம் போல் கிரீஷூம் தனது ஆட்டோவை ஓட்டிக் கொண்டு வீடு திரும்பினார். பின்னர் தனது ஆட்டோவில் கிடந்த தங்கச் செயினை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அந்த தங்கச் செயினை, தனது ஆட்டோவில் வந்த வாடிக்கையாளர் சித்ராவிடம் ஒப்படைக்க முடிவு செய்தார். அதன்படி அவரை தேடிப் பிடித்து, அவரிடம் தங்கச் செயினை ஒப்படைத்தார். அவர் கிரீஷூக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
மேலும் அவர் வெளியிட்ட வீடியோ பதிவில், ‘மாயமான எனது தங்கச் செயினை திருப்பி ஒப்படைத்த ஆட்டோ டிரைவர் கிரீஷூக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார். இந்த வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் டேக் செய்துள்ள பாலிவுட் நடிகையும், பாஜக எம்பியுமான கங்கனா, ‘எந்தவொரு சூழலிலும் வறுமையோ, பற்றாக்குறையோ உங்களை குற்றங்களைச் செய்யத் தூண்டாது; உங்களது செயல் தார்மீக கடமையையும், உண்மையான விழிப்புணர்வையும் ஏற்படுத்தி உள்ளது. மனசாட்சி என்பது எனக்குள் அப்பாற்பட்டது; அது எனக்கு மேலே உள்ளது; ஆனால் என்னுள் உள்ளது. நீங்கள் உங்களது தர்மத்தை பின்பற்றுங்கள்; அப்போது உங்களது கர்மா சரி செய்யப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.