தேவகோட்டை: கண்டதேவியில் அமைந்துள்ள ஸ்ரீபெரியநாயகி அம்பிகா சமேத சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயிலில் தேர் திருவிழா கொடியேற்றம், காப்பு கட்டுதலுடன் இன்று தொடங்கியது. சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே கண்டதேவி கிராமத்தில் ஸ்ரீபெரியநாயகி அம்பிகா சமேத சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் உள்ளது. சிவகங்கை தேவஸ்தானம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் பழங்காலம் முதலே தேர் திருவிழா வெகு விமரிசையாக நடப்பது வழக்கம்.
இதில் நான்கு நாடுகள் என்று அழைக்கப்படும் கிராம பொதுமக்கள் தேரை வடம்பிடித்து இழுப்பர். தேரோட்டத்தில் முதல் மரியாதை விவகாரத்தில் இரண்டு பிரிவினரிடையே பிரச்னை ஏற்பட்டு தேரோட்டம் தடைபட்டது. பின்னர், ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவுப்படி கடந்த முறை தேரோட்டம் நடைபெற்றது. இந்த ஆண்டுக்கான விழா காப்பு கட்டுதல், கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்கள், இந்து சமய அறநிலையத்துறையினர், சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் ஊழியர்கள், வருவாய் மற்றும் காவல் துறையினர் பங்கேற்றனர்.