மதுரை : கண்ட தேவி கோவில் தேரோட்ட விழாவில் முதல் மரியாதை யாருக்கும் அளிக்க கூடாது என்பது தொடர்பான மனு மீதான விசாரணையில் புதிய உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று கூறி வழக்கு முடித்து வைக்கப்பட்டது. சிவகங்கை கண்டதேவியைச் சேர்ந்த கேசவமணி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில்,” சிவகங்கை மாவட்டம் கண்டதேவியில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ சொர்ண மூர்த்தீஸ்வரர் திருக்கோயில் சிவகங்கை தேவஸ்தானம் மற்றும் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது.
இந்த ஆண்டு ஜூலை 8ம் தேதி கண்டதேவி ஸ்ரீ சொர்ணமூர்த்தீஸ்வரர் திருக்கோயில் தேரோட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கோவில் தேரோட்ட நிகழ்வில் யாருக்கும் முதல் மரியாதை வழங்கக்கூடாது. அனைத்து தரப்பு சமூக மக்களுக்கும் சமமான வாய்ப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியம் மற்றும் நீதிபதி மரியா கிளாஸ் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “கடந்த ஆண்டுபோல் எந்தவித பாகுபாடும் இல்லாமல் விதிமுறைகளை பின்பற்றி விழாவை நடத்திக்கொள்ளலாம். சாதிய பாகுபாடு இருந்தால் உரிய அமைப்பிடம், அதிகாரிகளிடம் சென்று முறையிட்டு நிவாரணம் பெறலாம். ஒவ்வொரு பகுதியிலும் ஒரு பழக்க வழக்கம், மத நம்பிக்கை உள்ளது. இதில் உடனடியாக தலையிட்டு நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது. மேலும், இது குறித்த வழக்குகள் நீதிமன்றங்களில் விசாரணையில் இருப்பதால், தற்போது நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது” என கருத்து தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.