*3 பேர் படுகாயம்- மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
கண்டாச்சிபுரம் : விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தில் நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி இரு வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அடுத்த புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் காசிவேல் மகன் சக்திவேல் (28), இவரும் இவரது நண்பர்களான வீரங்கிபுரம் கிராமத்தை சேர்ந்த கணேசன் மகன் சிவா(39) மற்றும் சேகர் மகன் மஞ்சுநாதன் (33) ஆகிய மூவரும் நேற்று முன்தினம் இரவு வீரங்கிபுரம் கிராமத்திலிருந்து ஒரே பைக்கில் விழுப்புரம் மார்க்கமாக கண்டாச்சிபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களுக்கு எதிர்திசையில் கெடார் அடுத்த கொண்டியங்குப்பம் கிராமத்தை சேர்ந்த முருகன் மகன் கிரிதரன் (24) மற்றும் குப்புசாமி மகன் பிரதீப் (20) ஆகிய இருவரும் பைக்கில் திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டிருந்தனர். கண்டாச்சிபுரம் தும்பரமேடு பகுதியில் வந்த போது இரண்டு பைக்குகளும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் இரண்டு பைக்குகளிலும் பயணம் செய்த ஐந்து பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனை பார்த்ததும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் கண்டாச்சிபுரம் காவல்நிலையத்திற்கும் ஆம்புலன்சுக்கும் தகவல் அளித்தனர். தொடர்ந்து படுகாயம் அடைந்த ஐந்து பேரையும் பொதுமக்கள் உதவியுடன் போலீசார் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் மற்றும் கொண்டியங்குப்பம் கிராமத்தை சேர்ந்த கிரிதரன் ஆகிய இருவரும் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர்.
பலத்த காயமடைந்த பிரதீப், சிவா, மஞ்சுநாதன் ஆகிய மூவருக்கும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து கண்டாச்சிபுரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். விபத்தில் இரண்டு வாலிபர்கள் பலியான நிலையில் அவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.