காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நடைபெறவுள்ள கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட தொடக்க விழாவையொட்டி, நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேரில் ஆய்வு செய்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிறந்த அண்ணாவின் பிறந்தநாளையொட்டி, செப்டம்பர் 15ம் தேதி காலை 10 மணியளவில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தினை, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினால், பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் துவங்கி வைக்கப்படவுள்ளது.
விழா நடைபெறும் இடத்தில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பயனாளிகள் வந்து செல்லும் வாகனம் நிறுத்தும் இடங்கள், அங்கு செய்யப்பட்டுள்ள வசதிகள், விழா பந்தலில் பயனாளிகள் வந்து செல்வது குறித்தும், அவர்களுக்கு போடப்பட்டுள்ள இருக்கைகள் குறித்தும் கலெக்டர் கலைச்செல்வி மோகன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பயனாளிகளுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகளான குடிநீர், உணவு, சுகாதாரம் குறித்து அலுவலர்களிடம்
கேட்டறிந்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் ரம்யா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சிவ சண்முகசுந்தரம், நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் பெரியண்ணன், காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் கண்ணன், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.