காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் கலைச்செல்வி மோகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்கான வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. இதில் கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமை தாங்கி, வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணியானது, கலெக்டர் அலுவலகத்தில் துவங்கி மேட்டுத் தெரு, வள்ளல் பச்சையப்பன் தெரு, மூங்கில் மண்டபம் வழியாக காமராஜர் சாலையிலுள்ள தாலுகா அலுவலகம் வரை சென்று முடிவுற்றது.
இதில் 300க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கைகளில் `உங்கள் வாக்கு உங்கள் குரல்’, `வாக்களிப்பதே கடமை அதுவே எமது உரிமை’, `வாக்குரிமையே சமுதாய மேம்பாட்டிற்கு சிறந்த வழி’, `நமது வாக்கு நமது உரிமை’ உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திக்கொண்டு பேரணியாக சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், காஞ்சிபுரம் வருவாய் கோட்டாச்சியர் ரம்யா, கல்லூரி பேராசியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.