Monday, March 4, 2024
Home » காஞ்சிபுரத்தில் பட்டப்பகலில் பயங்கரம்; ஓடஓட விரட்டி பிரபல ரவுடி சரமாரி வெட்டிக்கொலை: 3 தனிப்படை அமைத்து விசாரணை

காஞ்சிபுரத்தில் பட்டப்பகலில் பயங்கரம்; ஓடஓட விரட்டி பிரபல ரவுடி சரமாரி வெட்டிக்கொலை: 3 தனிப்படை அமைத்து விசாரணை

by Karthik Yash

சென்னை: காஞ்சிபுரத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி, பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். காஞ்சிபுரம் பல்லவர் மேடு வ.உ.சி தெரு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (எ) பிரபாகரன் (35). இவர் மீது காஞ்சிபுரம் சிவகாஞ்சி, விஷ்ணு காஞ்சி, காஞ்சிபுரம் தாலுகா உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் 4 கொலை வழக்குகளும், 20க்கும் மேற்பட்ட கொலை முயற்சி, அடிதடி, வழிப்பறி, ஆள் கடத்தல், பணம் கேட்டு மிரட்டல் போன்ற வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், ஒரு கொலை வழக்கு தொடர்பாக விசாரணைக்காக நேற்று காஞ்சிபுரம் நீதிமன்றம் சென்ற பிரபாகரன், காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டுவிட்டு வீட்டுக்கு தனது பைக்கில் வந்தார்.

வீட்டின் அருகே வந்தபோது, காரில் வந்த மர்ம நபர்கள் பிரபாகரனை வழிமறித்து கண்ணிமைக்கும் நேரத்தில் சரமாரியாக வெட்டியது. அப்போது ரவுடி பிரபாகரன், கொலை கும்பலிடம் இருந்து தப்பிக்க அருகில் உள்ள புதுப்பாளையம் தெரு வழியாக ரத்த காயங்களுடன் தலைதெறிக்க ஓடினார். இதில், விடாமல் துரத்திய மர்ம கும்பல் பிரபாகரனை தலை, கழுத்து, முகம் போன்ற பகுதிகளில் அடுத்தடுத்து சரமாரியாக வெட்டியது. இதில் பலத்த காயம் அடைந்த பிரபாகரன் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவர் உயிரிழந்ததை உறுதி செய்தவுடன் காரில் வந்த மர்ம கும்பல் அங்கிருந்து உடனடியாக தப்பித்துச் சென்றது.

படுகொலை செய்யப்பட்ட ரவுடி பிரபாகரன், அவருடைய தம்பி மண்டேலா என்பவருடன் சேர்ந்து, பணம் கேட்டு தொழிலதிபர்களை மிரட்டுதல், கஞ்சா விற்பனை போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. 4 கொலை வழக்குகள் மற்றும் 20க்கும் மேற்பட்ட வழக்குகள் பிரபாகரன் மீது உள்ளதால், அவர் ஏ பிளஸ் ரவுடியாக போலீசாரால் கண்காணிக்கப்பட்டு வந்தார். இந்நிலையில்தான் நேற்று பட்டப்பகலில் அவர் மர்ம கும்பலால் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிவகாஞ்சி போலீசார் பிரபாகரனின் உடலை மீட்டனர். பின்னர், பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட போலீஸ் எஸ்பி சுதாகர் தலைமையிலான போலீசார் ஆய்வு மேற்கொண்டு அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து, தடயவியல் நிபுணர்களுடன் மோப்ப நாய் அங்கு வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும், 3 தனிப்படைகளை அமைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

fourteen − 11 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi