காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில், பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் தங்க பல்லி, வெள்ளி பல்லி அத்திகிரி மலையின் தெற்குப் பகுதியில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று கோயில் நிர்வாக அறங்காவலர் ராஜலட்சுமி தெரிவித்துள்ளார். 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் அத்திவரதர் உற்சவத்திற்கும், வைகாசி பிரம்மோற்சவத்திற்கும் எவ்வளவு பிரசித்தி பெற்றதோ, அந்த அளவிற்கு தங்க பல்லி, வெள்ளி பல்லி தரிசனத்திற்கு பிரசித்தி பெற்று விளங்குகிறது.
அந்த வகையில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு வரதராஜா பெருமாளையும், பெருந்தேவி தாயாரையும், தங்க பல்லி, வெள்ளி பல்லியையும், தரிசனம் செய்ய நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்ளூர், வெளியூர், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம் மற்றும் வட மாநிலங்களில் இருந்து வந்து செல்கின்றனர். வரதராஜ பெருமாள் கோயிலில் கிழக்கு கோபுரம், மேற்கு கோபுரம் உள்ளிட்டவைகளில் பலகோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வரதராஜ பெருமாள் சன்னதி கொண்டு எழுந்தருளியுள்ள அத்திகிரி மலையில் வடக்கு பகுதியில் சூரியன், சந்திரனுடன் தங்க பல்லி, வெள்ளி பல்லி ஆகியவை அருள் பாலிக்கும் வைய மாளிகை அமைந்துள்ளது. நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வரும் நிலையில், பக்தர்களின் வசதிக்காக வைய மாளிகையில் மாற்றம் செய்ய திருப்பணிகள் மேற்கொள்ள கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அதனால் தங்க பல்லி, வெள்ளி பல்லி தரிசனம் பக்தர்களுக்கு தடையில்லாமல் நடைபெறுவதற்கு வசதியாக அத்திகிரி மலையின் தெற்குப் பகுதியில் தற்காலிக தனி அறை அமைத்து சூரியன் சந்திரன் உடனான தங்க பல்லி வெள்ளி பல்லி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.வைய மாளிகையில் திருப்பணிகள் நடைபெற்று முடிந்தவுடன் மீண்டும் பழைய இடத்திற்கே மாற்றப்பட உள்ளதாக உதவி ஆணையரும், கோயில் நிர்வாக அறங்காவலருமான ராஜலட்சுமி தெரிவித்துள்ளார்.