காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் கலைச்செல்வி மோகன் தொடங்கி வைத்தார். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக முதல் வாரத்தில், பிரத்யோக தாய்ப்பால் புகட்டுதல், இணை உணவு அளித்தல், 2வது வாரத்தில் ஆரோக்கியமான குழந்தைகளை கண்டறிதல், ஊட்டச்சத்து, முன்பருவ கல்வி, யோகா, உள்ளூர் உணவு போன்ற ஆயுஷ் நிகழ்ச்சிகள் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையினை பின்பற்றுதல், மூன்றாவது வாரத்தில் ‘என் மனம் என் நாடு’, பழங்குடியினைரை மையமாகக்கொண்டு ஊட்டச்சத்து உணர்திறன், 4வது வாரத்தில் ரத்தசோகை பரிசோதனை, சிகிச்சை பேச்சு, ஒட்டுமொத்த ஊட்டச்சத்து (பொது உணர்திறன்) நடவடிக்கைகள், சமுதாய தோட்டங்கள் அமைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மற்ற துறைகளுடன் இணைந்து நடத்தப்பட்டு வருகிறது.
ஊட்டச்சத்து மாத விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ், அமைக்கப்பட்டிருந்த ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு கண்காட்சியை கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேரில் பார்வையிட்டார். பின்பு, ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியினை கலெக்டர் தலைமையில், அங்கன்வாடி பணியாளர்கள் எடுத்து கொண்டனர்.
அதனைதொடர்ந்து, ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் கலைச்செல்வி மோகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணியில், 100-150 அங்கன்வாடி பணியாளர்கள் கலந்துகொண்டு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் முதல் மேட்டுத்தெரு வரை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், உதவி கலெக்டர் (பயிற்சி) சங்கீதா, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பானுமதி, அங்கன்வாடி பணியாளர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், வட்டார திட்ட உதவியாளர்கள், பயனாளிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.