காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சியில், திடக்கழிவு மேலாண்மை திட்டம் ரூ.40 கோடி செலவில் மேற்கொள்ளப்படுவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் மாதாந்திர கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. காஞ்சிபுரம் மாநகராட்சியில் மாதாந்திர மாநகராட்சி உறுப்பினர்கள் கூட்டம் நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. மேயர் மகாலட்சுமி யுவராஜ் தலைமை தாங்கினார். துணை மேயர் குமரகுருநாதன், ஆணையர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மாநகராட்சி உறுப்பினர்கள் 51 பேர் கூட்டதில் கலந்து கொண்டனர்.
இதில், மாநகராட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் தங்கள் பகுதிக்கான வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேசுவதில் திமுக – அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் போட்டி போட்டதால் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. பின்னர், தமிழக அரசின் சார்பில் திடக்கழிவு மேலாண்மை சிறப்பு திட்டம் ரூ.40 கோடி செலவில் மேற்கொள்ளப்பட உள்ளது அதற்கு மாமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என மாநகராட்சி ஆணையர் கண்ணன் விளக்க உரை ஆற்றினார். இதைத் தொடர்ந்து திட்டத்திற்கு மாமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும் பகுதியில் வாகனங்கள் சென்று வருவதற்கு சிரமம் ஏற்பட்டு வருவதாகவும், சாலை வசதி மின்விளக்கு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் இடம் கோரிக்கை வைத்தனர். மாமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக மேயர் உறுதி அளித்தார். மேலும், மாநகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்தும் டெண்டர்கள் குறித்தும் 65 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.