சென்னை: காஞ்சிபுரத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில், காஞ்சிபுரம் நகராட்சி முன்னாள் நகரமைப்பு ஆய்வாளர் சியாமளா வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் முக்கிய ஆவணங்கள், ரூ.1.39 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகத்தில் நகரமைப்பு பிரிவு ஆய்வாளராக பணிபுரிந்த சியாமளா, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரின்பேரில், காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் நகராட்சியாக இருந்தபோது, நகர அமைப்பு பிரிவு ஆய்வாளராக சியாமளா பணிபுரிந்து வந்தார். இவரின், கணவர் சேகர் காஞ்சிபுரம் மின்வாரிய அலுவலகத்தில் மின்பாதை ஆய்வாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார்.இவர், கடந்த ஆண்டு திருநெல்வேலி மாவட்டம், களக்காடுக்கு பணி மாறுதலாகி சென்றுள்ளார். தற்போது, பணி மாறுதலாகி மீண்டும் செய்யாறு நகராட்சியில் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், சியாமளா மற்றும் அவரின் கணவர் வருமானத்திற்கு அதிகமாக ரூ.73 லட்சம் சொத்து சேர்த்ததாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் 6 போலீசார், நேற்று காலை 6 மணியளவில் காஞ்சிபுரம் மண்டித்தெரு அருகே உள்ள சியாமளா வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாக அவரது வீடு மற்றும் சொத்து ஆவணங்கள் குறித்த சோதனை நடத்தினர். முடிவில் கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 39 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், பெரும்பாலான சொத்து ஆவணங்கள் வங்கி லாக்கரில் வைக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.