மதுராந்தகம்: காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், லத்தூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் கே.எஸ்.ராமச்சந்திரன் (59). இவர் திமுகவில் கடந்த 2002ம் ஆண்டு முதல் ஒன்றிய செயலாளராகவும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவராகவும், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தலைவராகவும், 2006ம் ஆண்டில் ஒன்றியக்குழு பெருந்தலைவராகவும், கடந்த 2021ம் ஆண்டு முதல் ஒன்றியக்குழு உறுப்பினராகவும் ஊராட்சி மன்றத் தலைவராகவும் பணிபுரிந்துள்ளார். இவரது மனைவி சாந்தி ராமச்சந்திரன். இவர், தற்போது லத்தூர் ஒன்றிய பெருந்தலைவராக இருந்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று மாலை லத்தூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் கே.எஸ்.ராமச்சந்திரன் உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். இதுகுறித்து தகவலறிந்ததும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மறைந்த கே.எஸ்.ராமச்சந்திரன் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும், மறைந்த கே.எஸ்.ராமச்சந்திரன் உடலுக்கு காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபு உள்பட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இவரது இறுதி ஊர்வலம், இன்று மாலை 4 மணியளவில் லத்தூர் ஒன்றியம், சோழக்கட்டு கிராமத்தில் நடைபெறுகிறது.