காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 274 கிராம ஊராட்சிகளிலும், 5 ஊராட்சி ஒன்றியங்களிலும், 1 மாவட்ட ஊராட்சிக்கும் தலா ஒரு மாற்றுத்திறனுடைய நபரை நியமன உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கலைச்செல்விமோகன் தெரிவித்துள்ளார்.ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, ஊரக உள்ளாட்சி மன்றங்களில் தலா ஒரு மாற்றுத்திறனுடைய நபரை நியமன உறுப்பினராக நியமனம் செய்ய ஆணையிடப்பட்டுள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 274 கிராம ஊராட்சிகளிலும், 5 ஊராட்சி ஒன்றியங்களிலும், 1 மாவட்ட ஊராட்சிக்கும் தலா ஒரு மாற்றுத்திறனுடைய நபரை நியமன உறுப்பினராக நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
தகுதிகள்/நிபந்தனைகள்: கிராம ஊராட்சி மன்றத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் அந்த கிராம ஊராட்சியில் வசிப்பவராகவும், ஊராட்சி ஒன்றியத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் அந்த ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஏதேனும் ஒரு கிராம ஊராட்சியில் வசிப்பவராகவும், மாவட்ட ஊராட்சிக்கு விண்ணப்பிப்பவர்கள் மாவட்டத்திலுள்ள ஏதேனும் ஒரு கிராம ஊராட்சியில் வசிப்பவராகவும் இருத்தல் வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட ஊராட்சியின் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றிருக்க வேண்டும்.விண்ணப்பதாரர்கள் மாற்றுத்திறனுடைய நபராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர்கள், விண்ணப்பிக்கும் நாளிலோ அதற்கு முன்னரோ 21 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
மாற்றுத்திறனாளிக்கான சான்று வழங்க அதிகாரம் அளிக்கப்பட்ட அலுவலரிடமிருந்து பெறப்பட்ட செல்லத்தக்க வகையிலான மாற்றுத்திறனாளிக்கான சான்று வைத்திருக்க வேண்டும்.குறிப்பிட்ட இயலாமையில் 40 சதவீதம் அளவுக்கு குறையாத மாற்றுத்திறனாளியாக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர்கள் படிவம்-1 மற்றும் இதர ஆவணங்களுடன் ரூ.20-க்கும் குறையாத முத்திரை கட்டணத் தாளில் கையொப்பமிட்ட உறுதிமொழி படிவத்துடன் சான்றுறுதி அலுவலரின் நோட்டரி பப்ளிக் முன்னிலையில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் அதற்கான உரிய விண்ணப்பப் படிவத்தினை வட்டார வளர்ச்சி அலுவலர்களிடமிருந்து பெற்று, (இணைதள முகவரி: www.kancheepuram.nic.in) விண்ணப்பத்தில் கோரப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் 20.7.2025க்குள் கிராம ஊராட்சி மன்றத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி), ஊராட்சி ஒன்றியத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ), மாவட்ட ஊராட்சிக்கு விண்ணப்பிப்பவர்கள் செயலர், மாவட்ட ஊராட்சி காஞ்சிபுரம் ஆகியோரிடம் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.