காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளை சட்டமன்ற பேரவையின் பொது நிறுவனங்கள் குழு உறுப்பினர்கள் நேரில் ஆய்வு செய்தனர். காஞ்சிபுரம் மாநகராட்சி ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை சட்டமன்ற பேரவையின் பொது நிறுவனங்கள் குழு தலைவர் ஏ.பி.நந்தகுமார் தலைமையில், குழு உறுப்பினர்கள் ஈ.ஆர்.ஈஸ்வரன், உடுமலை கே.ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ, மு.பெ.கிரி, ஆ.கோவிந்தசாமி, த.ம.சிந்தனை செல்வன், ஒய்.பிரகாஷ், டாக்டர் சி.விஜயபாஸ்கர், எம்.எச்.ஜவாஹிருல்லா ஆகியோர் கொண்ட குழு மற்றும் காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், கலெக்டர் கலைச்செல்வி மோகன் ஆகியோர் பல்வேறு துறைகளின் செயல்பாடுகளை நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இதில், காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட செவிலிமேட்டில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சார்பில், உயர் வருவாய் பிரிவு பன்னடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டும் பணி, கைத்தறி மற்றும் துணி நூல் துறை சார்பில் ஓரிக்கையில் இயங்கி வரும் ஜரிகை ஆலை, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஸ்ரீபெரும்புதூர் வட்டம், வல்லம் ஊராட்சியில் என்பீல்ட் இருசக்கர வாகனம் தயாரிக்கும் தொழிற்சாலை (யூனிட் ராயல் என்பீல்ட்) மற்றும் சிப்காட் நிறுவனம் சார்பில் வல்லம்-வடகால் தொழிற்பூங்காவில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்காக கட்டப்பட்டுள்ள சிப்காட் மெகா குடியிருப்பு வளாகம் மற்றும் குன்றத்தூர் வட்டம், ஒரகடத்தில் மருத்துவ சாதனைங்கள் தொழிற்பூங்கா அமைக்கும் பணி ஆகிய வளர்ச்சி பணிகளை சட்டமன்ற பேரவையின் பொது நிறுவனங்கள் குழுக்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அதனைத்தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், சட்டமன்ற பேரவையின் பொது நிறுவனங்கள் குழு தலைவர் ஏ.பி.நந்தகுமார் தலைமையில், அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், பொது நிறுவனங்கள் குழு இணை செயலாளர் தேன்மொழி, குழு அலுவலர் செந்தில்குமார், பிரிவு அலுவலர் பாபு, அனைத்துத்துறை அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், சட்டமன்ற பேரவையின் பொது நிறுவனங்கள் குழு தலைவர் ஏ.பி.நந்தகுமார் தலைமையில், அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.