காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் 71வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழாவையொட்டி, கண் பரிசோதனை முகாமினை கூடுதல் பதிவாளர் அ.க.சிவமலர் தொடங்கி வைத்தார். காஞ்சிபுரத்தில் 71வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழாவின் 5ம் நாளான நேற்று காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை இணைந்து கண் பரிசோதனை முகாம் நடத்தியது. காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்0பதிவாளர் பா.ஜெயஸ்ரீ முன்னிலை வகித்தார்.
இதில், காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநர் அ.க.சிவமலர் தலைமை தாங்கி, கண் பரிசோதனை முகாமை தொடங்கி வைத்தார். இம்முகாமில், பொதுமக்களுக்கு கிட்டப்பார்வை, தூரப்பார்வை, கண் புரை, கண்ணில் நீர்வடிதல், ஆகிய குறைபாடுகளுக்கு அகர்வால்ஸ் கண் மருத்துவமனை குழுவினர் வைஷாலி, முரளி, பாலாஜி, கவிகீர்த்திகா, பட்டம்மாள் உள்ளிட்ட மருத்துவ குழுவினரால், 150க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு கண் பரிசோதனைகள் செய்யப்பட்டு, மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில், காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் துணைப்பதிவாளரும், முதன்மை வருவாய் அலுவலருமான வெங்கட்ரமணன், பொது மேலாளர் சீனிவாசன், துணை பொது மேலாளர்கள், கூட்டுறவுத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.