காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அசோக் நகர் பகுதியை சேர்ந்த ஒன்றரை வயது பெண் குழந்தையின் தலையில் மாட்டிக்கொண்ட பாத்திரத்தினை சாதுரியமாக காஞ்சி அரசு மருத்துவர்கள் சதுர்யமாக அகற்றினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காஞ்சிபுரம் அடுத்த அசோக் நகர் பகுதியை சேர்ந்தவர் கீர்த்தனா. இவர், வழக்கம்போல நேற்று காலை வீட்டில் சமையல் செய்துக்கொண்டு இருந்தார். அப்போது, வெளியில் விளையாடிக் கொண்டிருந்த அவரின் ஒன்றரை வயது பெண் குழந்தை லக்க்ஷனா யின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. சத்தம்கேட்டு வந்து பார்த்தபோது, குழந்தையின் தலையில் அலுமினிய பாத்திரம் மாட்டிக்கொண்டு, குழந்தை மூச்சு விட சிரமப்பட்டு கொண்டிருந்தது.
இதனைகண்டு, அதிர்ச்சியடைந்த தாய் கீர்த்தனா, குழந்தையை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம், காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். அங்கு, அவசர சிகிச்சை பிரிவில் குழந்தை லக்க்ஷனா அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, காது, மூக்கு, தொண்டை மருத்துவர் திவாகர், மணிமாலா, எலும்பு மருத்துவர் தண்டபாணி, செவிலியர் கண்காணிப்பாளர் தேன்மொழி மற்றும் அவசர சிகிச்சை பிரிவு செவிலியர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர், சுமார் அரை மணி நேரம் போராடி ஒன்றரை வயது குழந்தை லக்க்ஷனா தலையில் மாட்டிருந்த சமையல் பாத்திரத்தை ஆக்சா பிளேடு, கட்டிங் பிளேயர் உள்ளிட்ட உபகரணங்கள் மூலம் அறுத்து எடுத்து, குழந்தையை பத்திரமாக மீட்டனர். இதனையடுத்து, குழந்தையின் பெற்றோர் நிம்மதி அடைந்தனர். சில மாதங்களுக்கு முன்பு தைல டப்பாவை விழுங்கிய குழந்தையை இஎன்டி மருத்துவர் மணிமாலா காப்பாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.