காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் வரும் 15ம் தேதி கலைஞர் மகளிர் உரிமைதொகை வழங்கும் திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க வருகிறார். அவருக்கு சிறப்பான வரவேற்று அளிப்பது என்று மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் குன்றத்தூரில் மாவட்ட அவை தலைவர் துரைசாமி தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. மாவட்ட துணை செயலாளர்கள் கருணாநிதி எம்எல்ஏ, வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ மூர்த்தி, மாவட்ட பொருளாளர் விசுவநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு பேசியதாவது: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் அறிவித்த வாக்குறுதியை நிறைவேற்றி, மகளிர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கிடும். கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா, செப்டம்பர் 15ம்தேதி அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, காஞ்சிபுரத்தில் காலை 10 மணியளவில் நடைபெறுகிறது. இதில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு துவக்கி வைக்கிறார்.
திமுக முப்பெரும் விழா வரும் 17.9.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் வேலூரில் நடைபெறுகிறது. விழாவில், கலந்துகொள்ளும் முதல்வருக்கு, காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் எல்லையில் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். மேலும், காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் உள்ள மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர்களில் கிளை, வார்டுகளில் உள்ள அனைத்து திமுக கொடி கம்பங்களிலும், கொடியேற்றியும், அதன் அருகே அண்ணாவின் உருவப் படத்தினை அலங்கரித்து வைத்தும், சர்க்கரை பொங்கல் – இனிப்பு வழங்கியும் வழக்கம்போல மிகவும் எழுச்சியுடன் அண்ணாவின் 115வது பிறந்தநாள் விழாவை மாவட்டம் முழுவதும் மிகச்சிறப்பான முறையில் கொண்டாட வேண்டும்.
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் பிறந்தநாளை சமூகநீதி நாளாக கடைபிடிக்க வேண்டும். தந்தை பெரியார் 145வது பிறந்த நாளான செப்டம்பர் 17ம்தேதி அன்று பெரியார் உருவ சிலைக்கும், உருவப் படத்திற்கும் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தி, சமூக நீதிநாளாக கடைபிடித்து திமுகவினர் அனைவரும் உறுதிமொழி ஏற்று தந்தை பெரியாருக்கு பெருமை சேர்ப்பது என்று காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக முடிவெடுத்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், முன்னாள் எம்எல்ஏக்கள், உறுப்பினர்கள் தமிழ்மணி, இதயவர்மன், அரசு, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அன்புச்செழியன், ஆதிமாறன், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன், பகுதி செயலாளர்கள் குணாளன், சந்திரன், ஜெயகுமார், கருணாநிதி, ஜோசப் அண்ணாதுரை, கருணாகரன், பெர்னாட், செம்பாக்கம் சுரேஷ், மாடம்பாக்கம் நடராஜன், பெருங்களத்தூர் சேகர், காமராஜ், இந்திரன், ஒன்றிய செயலாளர்கள் கோபால், கருணாநிதி, பையனூர் சேகர், ஆராமுதன், வந்தேமாதரம், மூவரசம்பட்டு ரவி, ஆப்பூர் சந்தானம், நகர செயலாளர்கள் நரேந்திரன், சண்முகம், பாபு, ஜபருல்லா, சத்தியமூர்த்தி, பேரூர் செயலாளர்கள் தேவராஜ், யுவராஜ், சதீஷ்குமார், அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.