காஞ்சிபுரம்: பெஞ்சல் புயல் காரணமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த கனமழையால் சுமார் 5000 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமானதால், விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக, பெஞ்சல் புயல் காரணமாக தொடர்ந்து பலத்து சூறைக்காற்றுடன் கனமழை மற்றும் மிதமான மழை பெய்தது. இதனால், மாவட்டத்தில் நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி, குடியிருப்புகள் மற்றும் சாலைகளில் மழைநீர் தேங்கி பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் இடையூறு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வந்ததால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 388 ஏரிகள் நிரம்பி உள்ளன.
மேலும் நீராதாரத்திற்கும், விவசாயத்திற்கும் பயன்படக்கூடிய 15 ஏரிகளில், 3 பெரிய ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. தற்போது, பெய்து வரும் கனமழையின் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூர், நாகப்பட்டு, ஈச்சம்பாக்கம், புதுப்பாக்கம், தொடூர், கம்மவார் பாளையம், வேலியூர், மேல் போடவூர், காரை ஆகிய கிராமங்களில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், கனமழை காரணமாக நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. இதனால், கடனை வாங்கி பயிரிட்ட விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். விவசாயிகளுடன் நலன் கருதி தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் சங்கத்தினர் கூறியதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரந்தூர், கம்மவார் பாளையம், மேல் மேல்பொடவூர் உள்ளிட்ட 20க்கு மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள், தங்கள் நிலங்களில் நெல் பயிரிட்டு இருந்தனர். இன்னும் 10, 15 நாட்களுக்குள் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள், தற்போது பெய்து வரும் தொடர்மழை காரணமாக சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நனைந்து சேதமடைந்துள்ளன. இதனால், மழை விட்டு நெல் தாள்கள் காய்ந்த பிறகுதான் நெல்பயிர் அறுவடை செய்ய முடியும்.
மேலும், பெரும்பாலான நெல்பயர்கள் நீரில் மூழ்கி உள்ளதால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். எனவே, விவசாயிகளின் நலன் கருதி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, தமிழ்நாடு அரசு ஏக்கருக்கு 50 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வேளாண்மைத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் கள ஆய்வு செய்து, நஷ்டம் அடைந்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.