காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நடந்த வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு குறித்த முகாமில் விவசாயிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். தமிழ்நாடு அரசு விவசாயிகள் நலனுக்க வேளாண்மை துறையில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வந்து திறன்பட செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்கில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு குறித்த மாவட்ட அளவிலான முகாம் நடைபெற்றது.
இந்த முகாமினை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி துவக்கி வைத்து பார்வையிட்டு விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு கையேடுகளை விவசாயிகளுக்கு வழங்கினார்.இதனைத்தொடர்ந்து நடைபெற்ற முகாமில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த, விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் இயக்கம் மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்து விவசாயிகள் தெரிந்து கொண்டு செயல்படுத்தும் நோக்கில் இந்த முகாம் அமைக்கப்பட்டது.
வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை இயக்குதல் மற்றும் பராமரித்தலில் செய்யக்கூடியது, செய்யக்கூடாதது குறித்தும், திறன்மிகு செயல்பட மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள், பராமரிக்கும் வழிமுறைகள், பழுதுகளை கண்டறிதல்,வாகனங்களின் உதிரிபாகங்கள் குறித்த தெளிவுரைகளும், விளக்கவுரைகளும் எடுத்துரைக்கப்பட்டன. மேலும், இந்த முகாமில் விவசாயிகளே டிராக்டர்கள் மற்றும் உபகரணங்களை கையாண்டு இயக்கிடும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மேலும், இந்த முகாமில் வேளாண் பொறியியல் துறை சார்பில் நடமாடும் நெல் உலர்த்தும் இயந்திரம், டிரோன் (தானியங்கி வானூர்தி) மூலம் மருந்து தெளிக்கும் இயந்திரம், தேங்காய் பறிக்கும் இயந்திரம், நெல் நடவு செய்யும் இயந்திரம், நெல் சேமிக்கும் இயந்திரம் உள்ளிட்ட பல நவீன கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டு விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கமும் செய்து காண்பிக்கப்பட்டது.