காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் காலனி அரசினர் உயர்நிலைப்பள்ளியில் “எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி” என்னும் திட்டத்தின் மூலம், பள்ளிகளில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியினை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேற்று முன்தினம் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். அப்போது, கலெக்டர் தலைமையில், மாணவ – மாணவிகள் பள்ளி தூய்மை உறுதிமொழியினை எடுத்துக்கொண்டனர். பின்னர், கலெக்டர் கலைச்செல்வி மோகன் பேசியதாவது:
தமிழ்நாடு அரசு சார்பில், அரசு பள்ளி குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்யும் வகையில், “எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி” என்ற சிறப்பான திட்டத்தினை இக்கல்வியாண்டில் அனைத்து அரசு பள்ளிகளிலும் செயல்படுத்திட திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தில், தனி மனித சுகாதாரம், சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கழிவு மேலாண்மை முறைகள், கழிவுகளை மறுசுழற்சி செய்தல், பிளாஸ்டிக் இல்லாத பள்ளி வளாகம், பசுமைப்பள்ளி உருவாக மரங்கள் நடுதல், பள்ளி காய்கறி தோட்டம் அமைத்தல், மட்கும் குப்பை, மட்காத குப்பைகளை பிரித்தெடுத்தல், பாதுகாப்பான குடிநீர், சுத்தமான கழிவறைகள், வகுப்பறைகள், சுத்தமான பள்ளி வளாகப் பராமரிப்பு போன்றவை அடங்கும்.
இத்திட்டத்தினை பல துறைகள் இணைந்து செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளி அளவில் இத்திட்டத்தின் குழுத் தலைவராக தலைமையாசிரியர் இருப்பார். சுற்றுச்சூழல் மன்ற ஆசிரியர், உறுப்பினர் செயலாளராக செயல்படுவார். செயல்படுத்துதல் குழுவில் எஸ்எம்சி உறுப்பினர்கள் இருப்பர். மேலும், இத்திட்டத்தில் மாணவர்கள், பெற்றோர், உள்ளூர் நிர்வாகம், தன்னார்வ அமைப்பினர் மற்றும் முன்னாள் மாணவர்களும் ஈடுபடுவர்.
இத்திட்ட செயல்பாடுகள் 2023 செப்டம்பர் மாதம் துவங்கி 2024 பிப்ரவரி வரை தொடர்ச்சியாக நடைபெறும்.
இதன் செயல்பாடுகள் ஒவ்வொரு மாதமும் மதிப்பீடு செய்யப்படும். அனைத்து நிலைகளிலும் சிறப்பாக செயல்படும் பள்ளிகள், மாணவர்கள், வழிகாட்டி ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வதொண்டு அமைப்பினருக்கும் விருதுகள் வழங்கப்பட உள்ளன. எனவே, அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி கால அட்டவணைப்படி அனைத்து நிகழ்வுகளையும், சிறப்பாக நடத்திட பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவ செல்வங்களை கேட்டுக்கொள்கிறேன்.