காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பிணவறை முறையாக பராமரிக்கப்படாததால் சடலங்கள் அழுகி அகோரமாகி விடுவதாக உறவினர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு, பிரசவ பிரிவு, நுண்கதிர் பிரிவு, பச்சிளம் குழந்தைகள் பிரிவு, இயன்முறை சிகிச்சை பிரிவு, எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு, காது, மூக்கு, தொண்டை பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் இயங்கி வருகின்றன. இந்த, அரசு தலைமை மருத்துவமனைக்கு தினந்தோறும் காஞ்சிபுரம் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளான தாமல், பாலுசெட்டிசத்திரம், முசரவாக்கம், திம்மசமுத்திரம், ராஜகுளம், முத்தியால்பேட்டை, களக்காட்டூர், ஆர்ப்பாக்கம், ஓரிக்கை, செவிலிமேடு, அய்யங்கார்குளம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளான சுமார் 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
அருகிலுள்ள ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நோயாளிகளும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மேலும், சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, காஞ்சிபுரம் – பாண்டிச்சேரி மாநில நெடுஞ்சாலைகளில் நடைபெறும் விபத்துகளில் இறந்து போனவர்களின் சடலங்களையும், தற்கொலை, விஷக்கடி மற்றும் உடல்நலக் கோளாறால் இறந்து போனவர்களின் சடலங்களையும், ஆதரவற்ற நிலையில் இறந்து போனவர்களின் சடலங்களையும், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவந்து பிரேத பரிசோதனை செய்து பிணவறையில் உள்ள குளிரூட்டும் பெட்டிகளில் வைத்து விடுவார்கள். உறவினர்கள் வந்தவுடன் அவர்களிடம் அந்தந்த சடலங்கள் ஒப்படைக்கப்படும்.
இந்நிலையில், பிணவறை முறையாக பராமரிக்கப்படாததால் சடலங்கள் அழுகி அகோரமாக மாறி விடுவதால் இறந்தவர்களின் உறவினர்கள், பிணவறை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம், தாமல் பகுதியை சேர்ந்தவர் சிவலிங்கம் – நிர்மலா தேவி தம்பதிகள். இவர்களின் 4 மகன்களும், ஒரு மகளும் லண்டனில் வசிக்கின்றார்கள். காஞ்சிபுரத்தை பூர்விகமாக கொண்ட சிவலிங்கம் இலங்கை யாழ்ப்பாணத்தில் நகை கடை வியாபாரம் செய்து வந்த நிலையில், மகன்கள் அனைவரும் நல்ல நிலையில் வெளிநாட்டில் வேலை செய்வதால் தற்போது சிவலிங்கம் தன் மனைவி நிர்மலாதேவியுடன் தாமல் பகுதியில் வசித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 4ம்தேதி அன்று சிவலிங்கத்துக்கு மாரடைப்பு ஏற்பட்டு வீட்டிலேயே இறந்துபோனார். காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வந்து பரிசோதித்ததில் சிவலிங்கம் இறந்தது உறுதியானது. மேலும், சிவலிங்கத்தின் பிள்ளைகள் அனைவரும் லண்டனில் வசிப்பதால் இறந்துபோன சிவலிங்கத்தின் உடல் 5ம்தேதி விடியற்காலையில் பிணவறையில் உள்ள குளிரூட்டும் பெட்டியில் வைக்கப்பட்டது. சிவலிங்கத்தின் மூன்று மகன்கள் மட்டும் வெளிநாட்டிலிருந்து நேற்று காலை விமானம் மூலம் மீனம்பாக்கம் வந்து, அங் கிருந்து தாமல் பகுதியில் உள்ள வீட்டுக்கு சென்று, அப்பாவின் இறுதி சடங்கிற்கான வேலைகளை முடித்துவிட்டு அப்பாவின் சடலத்தை பெற்றுக்கொள்ள, காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்தனர்.
பிணவறையில் வைக்கப்பட்டுள்ள தன் அப்பாவின் சடலத்தை பார்த்த மூன்று மகன்களும் அதிர்ந்து போய் மயக்கம் அடைந்தனர். தன் தந்தை பார்ப்பதற்கு மிகவும் சிவப்பாக மெலிந்த தேகத்துடன் மிக ஆரோக்கியமாக லட்சணமாக இருப்பார். இது, என் அப்பாவே இல்லை இந்த உடல் மிகவும் குண்டாக கருப்பாக உள்ளது. என் அப்பாவின் உடல் எங்கே என பிணவறையில் உள்ள ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தனர். பிணவறையில் உள்ள ஊழியர்களும், மருத்துவமனையின் நிர்வாக அலுவலரான டாக்டர் பாஸ்கர் அவர்களும் இதுதான் சிவலிங்கத்தின் உடல் என உறுதி அளித்ததன்பேரில், அழுகிய தோற்றத்துடன் பல மடங்கு பெருகி துர்நாற்றம் வீசும் தன் தந்தையின் உடலை போஸ்ட்மார்டம் செய்ய மூவரும் சம்மதித்தனர். இதனைத்தொடர்ந்து சிவலிங்கத்தின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு மகன்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
* கூடுதல் பிணவறை பெட்டிகள் அமைக்க கோரிக்கை
சென்னை – பெங்களுரூ தேசிய நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதில், காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஏற்படும் சாலை விபத்து பலி மற்றும் பல்வேறு விபத்துகளில் இறப்பவர்களின் உடல்கள் காஞ்சிபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனை பிணவறை குளுரூட்டியில் பெட்டியில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. இதில், குளுரூட்டி பொட்டியில் ஆறு அறைகள் மட்டுமே உள்ளன. விபத்தின் உண்மை தன்மை தெரியாமல் உடல்களை வாங்க மாட்டோம் என்று கூறி சடலங்களை வாங்க உறவினர் எதிர்ப்பு தெரிவிப்பது.
மேலும், இறந்தவர்களின் உறவினர் வெளிநாடுகளில் இருந்தால் அவர்கள் வந்து உடலை வாங்க நாள்கள் ஆகின்றன. அதுபோன்ற நேரங்களில் கூடுதல் பிணவறை குளுரூட்டிகள் தேவைப்படுகின்றன. ஏன் என்றால், ஏற்கனவே நாள்கணக்கில் உள்ள சடலங்கள் உள்ளநிலையில் தினந்தேறும் ஏற்படும் மரணங்களால் அந்த உடல்களை வைத்து பாதுகாப்பதற்கு போதிய வசதி இல்லை. இதனால், உடல்களை வைத்து பாதுகாப்பதில் பெரும் சிரம் ஏற்படுகிறது. எனவே, கூடுதல் குளுரூட்டி பொட்டிகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.