காஞ்சிபுரம்: ஜி.கே.மூப்பனாரின் பிறந்தநாளை முன்னிட்டு, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தமாகா சார்பில் விஷார் கிராமத்தில் நடந்த விவசாயிகள் தினவிழாவில், விவசாயிகளுக்கு பல லட்சம் மதிப்புள்ள இடுபொருட்களை ஜி.கே.வாசன் எம்பி வழங்கினார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் மறைந்த ஜி.கே.மூப்பனாரின் பிறந்தநாளான ஆகஸ்ட் 19ம்தேதியை விவசாயிகள் தின விழாவாக கொண்டாட வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் எம்பி கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.
அதன்படி, ஆகஸ்ட் 19ம்தேதியான நேற்று முன்தினம் ஜி.கே.மூப்பனாரின் 93வது பிறந்தநாள் விழா சென்னை மண்டல விவசாய அணி மற்றும் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தமாகா சார்பில், காஞ்சிபுரம் அடுத்த விஷார் கிராமத்தில் கொண்டாடப்பட்டது. காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தமாகா தலைவர் மலையூர் வி.புருஷேத்தமன் தலைமை தாங்கினார். பேண்டு வாத்தியங்கள் முழங்க, நாட்டுப்புற கலைஞர்களின் ஆடல் பாடலுடன் விழா மேடைக்கு ஒரு கிலோ மீட்டர் தூரம் டிராக்டர் ஓட்டியபடி தமாகா தலைவர் ஜி.கே.வாசன் எம்பி வந்தார். அதன்பிறகு விவசாய கூலி வேலை செய்யும் பெண்களோடு வயல்வெளியில் இறங்கி நாற்று நட்டார். தொடர்ந்து பனை விதைகளை விதைத்தார். விழாவில் கலந்துகொண்ட விவசாயிகளுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார். பல லட்ச ரூபாய் மதிப்பிலான மருந்து தெளிக்கும் இயந்திரம், நெல் நடவு இயந்திரம், களை பறிக்கும் இயந்திரம், விவசாய இடுபொருள் இயந்திரங்களை விவசாயிகளுக்கு வழங்கினார்.
அப்போது, ஜி.கே.வாசன் எம்பி பேசுகையில், `விவசாயிகள் தின விழா மாநாடுபோல நடைபெற்றுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் கட்சி நிர்வாகிகள் இதுபோன்று விழா நடத்த வேண்டும். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஆண்ட கட்சியும் இல்லை, ஆளுகின்ற கட்சியும் இல்லை. ஆனால், 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணியில் ஆளப்போகிற கட்சி தமிழ் மாநில காங்கிரஸ். அதற்கான உத்வேகத்தை காஞ்சிபுரம் ஏற்படுத்தி இருக்கிறது’ என்றார். நிகழ்ச்சியில், மண்டல விவசாய அணி தலைவர் பாபு, இளைஞரணி மாநில பொது செயலாளர் எஸ்.சங்கர், மாவட்ட வழக்கறிஞரணி தலைவர் ஜி.சுதர்சன், துணை தலைவர் இ.காளிதாஸ் மற்றும் நிர்வாகிகள் சசிகுமார், சுகுமார், விஷார் ஊராட்சி தலைவர் கார்த்திக் (எ) குபேர், துணை தலைவர் டி.யுவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.