காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏராளமான கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களை பார்ப்பதற்காக தினமும் காஞ்சிபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராங்களை சேர்ந்த ஏராளமானோர் வந்து செல்வார்கள். அது மட்டுமின்றி வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்களும் வருகை தந்து சுவாமியை தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். தற்போது சபரி மலை சீசன் என்பதால் தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
அந்த வகையில், காஞ்சிபுரம் சர்வ தீர்த்த குளம் அருகே அமைந்துள்ள ஏகாம்பரநாதர் கோயிலுக்கு தினமும் 30க்கும் மேற்பட்ட வாகனங்களில் பக்தர்கள் வருகின்றனர். இந்த கோயிலுக்கு வருபவர்களின் வாகனங்களை நிறுத்த வசதியாக ஒலிமுகமதுபேட்டை சர்வதீர்த்த குளத்தின் அருகே இடம் உள்ளது. இந்த இடத்தில்தான் வாகனங்கள் நிறுத்தப்படும். அதற்கு கட்டணமாக பஸ்சுக்கு ரூ.300, வேனுக்கு ரூ.200, காருக்கு ரூ.150, இருசக்கர வாகனத்துக்கு ரூ.20 என வசூலிக்கப்படுகிறது. இங்கிருந்து ஏகாம்பரநாதர் காயிலுக்கு செல்ல வேண்டுமானால் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. அதனால் அங்கிருந்து ஆட்டோ சவாரி உள்ளது. அதில் செல்லலாம். அல்லது சில பக்தர்கள் நடந்தும் செல்கின்றனர். சுவாமியை தரிசித்து விட்டு மீண்டும் ஆட்டோ மூலம் வாகனங்கள் பார்க்கிங் செய்யப்பட்டுள்ள இடத்துக்கு வருகின்றனர். அங்கு, தாங்கள் கொண்டு வந்த உணவுகளை சாப்பிடுகின்றனர். பின்னர், இலை உள்ளிட்ட குப்பைகளை அப்படியே போட்டு விடுகின்றனர். இதனால் அப்பகுதி குப்பை மேடாக மாறி வருகிறது. மேலும் போதுமான கழிவறை இல்லை. இதனால் அங்குள்ள காவலாளிகளிடம் பக்தர்கள் வாக்குவாதம் செய்கின்றனர்.
இதுகுறித்து இங்கு வரும் பக்தர்கள் கூறுகையில், ‘தினமும் 30க்கும் மேற்பட்ட வாகனங்களில் பக்தர்கள் வருகை தருகிறார்கள். அதற்காக பார்க்கிங் கட்டணம் வசூலிக்கிறார்கள். ஆனால் அதற்கேற்ப வசதி இல்லை. 2 கழிவறைதான் உள்ளது. அதுபோதுமானதாக இல்லை. கூடுதல் கழிவறை வசதி செய்து தர வேண்டும். இங்கு வருகை தரும் பக்தர்களுக்கு ஏற்ப போதிய வசதிகளை செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும். குப்பைகளை அகற்ற 2 பணியாளர்கள் மட்டுதான் உள்ளனர். அது போதாது. அதுவும் அவர்கள், இங்குள்ள குப்பைகளை அகற்றி விட்டு கோயில் பணிக்கு சென்று விடுகின்றனர். எனவே கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும்’ என்றனர்.
இதுகுறித்து கோயில் நிர்வாக தரப்பினர் கூறுகையில், ‘இங்குள்ள கழிவறைகள் பக்தர்களுக்காக இல்லை. அந்த கழிவறைகள் டிரைவர்களுக்கு மட்டும்தான் உள்ளது. பக்தர்கள் வெளியேதான் பார்த்து கொள்ள வேண்டும். காவலாளியிடம் சண்டை போட கூடாது. மேலும் சாப்பிட்ட பிறகு குப்பைகளை ஆங்காங்கே வீசுகின்றனர். இதனால் கழிவுகள் தேங்குகிறது. அவற்றை அகற்ற வேறு வழியில்லாமல் பணியாளர்களை நியமித்துள்ளோம்’ என்றனர்.