காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சிஎஸ்எம் மேல்நிலை பள்ளியில் மாவட்ட கல்வி துறை அலுவலகம் சார்பில், அறைகளில் வைக்கப்பட்டிருந்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்க வைத்திருந்த புதிய ஷூக்கள், காலணிகள் மற்றும் புத்தகங்கள் தீயில் எரிந்து நாசமானது. காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பிள்ளையார்பாளையம் பகுதியில் சேர்மன் சாமிநாத முதலியார் மாநகராட்சி உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகின்றது. இப்பள்ளியில் 8,9,10 ஆகிய வகுப்புகளில் அப்பகுதியைச் சுற்றியுள்ள சுமார் 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
ஆயுத பூஜை, விஜயதசமி என தொடர் விடுமுறையில் பள்ளிகள் உள்ள நிலையில், ஆயுத பூஜை தினமான நேற்று முன்தினம் பள்ளியில் யாரும் இல்லாதநிலையில், இப்பள்ளியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீவிபத்தினால், கரும் புகைகள் எழுந்ததை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக இது குறித்து காஞ்சிபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், உடனடியாக காஞ்சிபுரம் தீயணைப்பு துறையினர் பள்ளியிலுள்ள ஓர் அறையில் ஏற்பட்ட தீயினை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில், அவ்வறையில் மாணவிகளுக்கு அளிக்கப்பட புதிய காலணிகள், புத்தகங்கள் உள்ளிட்டவைகள் இந்த தீ விபத்தினால் சேதமடைந்தன. மேலும், தீ பரவாமல் இருக்க தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர். மேலும், பள்ளி ஏற்பட்ட இந்த திடீர் தீ விபத்திற்கு சமூக விரோத செயல்கள் புரியும் இளைஞர்கள் தான் காரணம் என அப்பகுதி மக்கள் சிவகாஞ்சி போலீசாரிடம் கூறி காவல்துறையினர் தொடர்ந்து ரோந்து வரவேண்டும் என கேட்டுக்கொண்டனர். இச்சம்பவ இடத்திற்கு டிஎஸ்பி ஜூலியர் சீசர் வந்து ஆய்வு நடத்தினார்.
இந்த பகுதியில் உள்ள மக்கள் கூறும்போது, இந்த பகுதியில் வசிக்கும் சில இளைஞர்கள் மதில் சுவர் தாண்டி குதித்து உள்ளே வந்து கஞ்சா புகைப்பதும், மதுபானம் அருந்துவதும் உள்ளிட்ட பல சமூக விரோத செயல்களை செய்கின்றார்கள். இது தொடர்பாக நாங்கள் ஏற்கனவே மனு கொடுத்தோம். நேற்று முன்தினம் கூட காவல் நிலையத்தில் மனு கொடுத்தோம். இதுவரை எந்தவிதமான பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வில்லை. அதனால்தான் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது என வேதனையுடன் தெரிவித்தனர்.
இது தொடர்பாக மாவட்ட கல்வித்துறை அலுவலக கண்காணிப்பாளர் கூறும்போது, ‘ஸ்ரீபெரும்புதூரில் இருந்த பள்ளி கல்வித்துறை அலுவலகம் மூடும்போது அந்த பொருட்களை அனைத்தும் எடுத்து வந்து இந்த பள்ளிக்கூடத்தில் வைத்தோம். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அளிக்கப்பட்ட ஷூக்கள், காலணிகள் உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்கள் எல்லாம் அதில் தான் வைத்து இருந்தோம். மதிப்பு தோராயமாக ரூ.50 ஆயிரம் இருக்கும் என தெரிய வருகிறது. இந்த தீ விபத்தினால் பிள்ளையார்பாளையம் பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.