பெங்களூரு: கர்நாடகாவில் ‘தக் லைஃப்’ படத்துக்கு திரைப்பட வர்த்தக சபை விதித்துள்ள தடையை நீக்க கோரி நடிகர் கமல்ஹாசன் சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் ‘‘தக் லைஃப்’’ திரைப்படம் தமிழ், கன்னடம் உள்பட ஐந்து மொழிகளில் வரும் 5ம் தேதி முதல் திரையிடப்படுகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது. இதில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். அந்த விழாவில் பேசிய நடிகர் கமல்ஹாசன், கன்னட மொழியின் தாயாக தமிழ்மொழி உள்ளது என்று கூறினார்.
கமல்ஹாசனின் கருத்துக்கு கர்நாடக மாநிலத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. அவருக்கு எதிராக சில கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தி வருவதுடன், கமல் நடித்துள்ள தக் லைப் திரைப்படத்தை பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் திரையிடக்கூடாது. அப்படி திரையிட்டால், திரையரங்குகளை நொறுக்குவோம் என்று எச்சரித்துள்ளனர். இந்த விஷயத்தில் கமலஹாசன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் கமலஹாசனில் சொந்த நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் கமலஹாசன், நேற்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கர்நாடகாவில் தனது ‘தக் லைஃப்’ திரைப்படத்தை வெளியிடுவதற்கும் திரையிடுவதற்கும் பெரும் எதிர்ப்பு உள்ளது. ஜூன் 5ம் தேதி திரைப்படம் வெளியாகிறது. கர்நாடக மாநிலத்தில் படம் வெளியிடுவதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் திட்டமிட்டப்படி ஜூன் 5ம் தேதி ‘‘தக் லைஃப்’’ படம் கர்நாடக மாநிலத்தில் வெளியிட அனுமதிக்க வேண்டும். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது என்று மாநில அரசு, கர்நாடக திரைப்பட வர்த்தக சபை மற்றும் கன்னட அமைப்புகளுக்கு உத்தரவிட வேண்டும். மேலும் திரைப்படம் வெளியிடும் வினியோகஸ்தர்கள், திரையங்க உரிமையாளர்கள் மற்றும் படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க மாநில போலீஸ் டிஜி மற்றும் ஐஜிபி, பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார். அம்மனு இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
* பிரச்னையை அரசியலாக்க வேண்டாம்
இது குறித்து துணைமுதல்வர் டி.கே.சிவகுமார் கூறும்போது, ‘நடிகர் கமலஹாசன் பேசியதை பெரியதாக்கி அரசியல் செய்ய வேண்டாம். கன்னட மொழிக்கான அங்கிகாரம் யாராலும் எப்போதும் மறைக்க முடியாது. மேலும் மொழியை அடிப்படையாக வைத்து பக்கத்து மாநிலங்களுடன் மோதல் போக்கு வளர்த்து கொள்வது கூட்டாச்சி தத்துவத்திற்கு ஏற்புடையதாக இருக்காது. கர்நாடகா-தமிழ்நாடு இடையில் பல விஷயங்களில் நல்லுறவு உள்ளது. நாம் மொழியால் பிரிவினையை ஏற்படுத்துவது சரியல்ல. இந்த விஷயத்தை யாரும் பெரியதாக்கி சட்டம்-ஒழுங்கு சீர்குலையும் வகையில் செயல்படுவதை தவிர்க்க வேண்டும். நாம் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும். சின்ன சின்ன பிரச்னைகளை அரசியலாக்க வேண்டாம். ஒற்றுமையுடன் இருப்போம்’ என்று கேட்டு கொண்டார்.