வாஷிங்டன்: “கமலா ஹாரிசை விட நான்தான் மிக அழகாக இருக்கிறேன்” என அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் பேசியது சர்ச்சையை எழுப்பி உள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ம் தேதி நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்(78) மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் பைடன் மீண்டும் போட்டியிட இருந்த நிலையில் சில காரணங்களால் போட்டியில் இருந்து பைடன் விலகி விட்டார்.
இதைத்தொடர்ந்து ஜனநாயக கட்சி வேட்பாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த தற்போதைய துணைஅதிபர் கமலா ஹாரிஸ்(59) போட்டியிடுகிறார். டிரம்ப் தன்னை எதிர்த்து போட்டியிடும் கமலா ஹாரிஸ் குறித்து இனரீதியாக அவ்வப்போது சர்ச்சை கருத்துகளை பேசி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன் பிரசாரம் ஒன்றிய பேசிய டிரம்ப், “பைடன் அதிபர் பதவிக்கு தகுதி அற்றவர். அவரை விட மிகவும் தகுதி குறைந்தவர் கமலா ஹாரிஸ்” என சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இந்நிலையில் கமலா ஹாரிஸ் பற்றி மீண்டும் சர்ச்சை கருத்தை டிரம்ப் தெரிவித்துள்ளார்.
பென்சில்வேனியா மாகாணத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் டிரம்ப் கலந்து கொண்டு பேசினார். அப்போது, “டைம் இதழில் கமலா ஹாரிசின் புகைப்படம் இருப்பது எனக்கு அதிருப்தி தருகிறது. அவரை விட நான்தான் மிகவும் அழகாக இருக்கிறேன். கமலா ஹாரிஸ் சிரிப்பதை கேட்டுள்ளீர்களா? அதுஒரு பைத்தியக்காரனின் சிரிப்பு. பைடனை விட ஹாரிசை தோற்கடிப்பது மிகவும் எளிது” என பேசி உள்ளார்.