வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5ம் தேதி நடக்க உள்ளது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் ஜோ பைடன் தேர்தல் களத்திலிருந்து விலகிய நிலையில், துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் களமிறங்கி உள்ளார். இதற்கிடையே, ஜனநாயக கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸ் அதிகாரப்பூர்வமாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, கமலா ஹாரிசுடன் நேரடி விவாதம் நடத்த தயார் என டிரம்ப் அறிவித்துள்ளார்.
அவர் தனது சமூக ஊடக பதிவில், ‘‘வரும் செப்டம்பர் 4ம் தேதி டிவி சேனலின் நேரடி விவாத நிகழ்ச்சியில் கமலா ஹாரிசுடன் பங்கேற்க நான் தயாராக இருக்கிறேன்’’ என கூறி உள்ளார். இதுவரை கமலா ஹாரிஸ் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்படாமல் இருந்ததால் அவருடனான நேரடி விவாதத்தை டிரம்ப் புறக்கணித்து வந்தார். இந்நிலையில், அதிகாரப்பூர்வ வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டதும் சவாலை ஏற்றுள்ளார். ஏற்கனவே பிரசாரத்தில் கமலா ஹாரிசுக்கு எதிராக இனவெறி தாக்குதலை டிரம்ப் நடத்தி வரும் நிலையில் அவர்களின் நேரடி விவாத நிகழ்ச்சி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு முன் பைடனுடன் நடந்த நேரடி விவாதத்தில் டிரம்ப் ஆதிக்கம் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.