Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கமல் பேசியது அவதூறாக இருந்தால் அவதூறு வழக்குதான் தொடர வேண்டும்.. 'Thug Life' படம் ரிலீஸை தடுத்தால் வழக்குப்பதிவு : உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

புதுடெல்லி :கர்நாடகாவில் 'Thug Life' படம் ரிலீஸை தடுத்தால் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர்கள் கமல், சிலம்பரசன் மற்றும் நடிகை திரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 5ம் தேதி நாடு முழுவதும் தக் லைப் திரைப்படம் வெளியானது. குறிப்பாக இத்திரைப்படத்தின் புரோமோஷன் விழாவில் கமல்ஹாசன் பேசியது சர்ச்சையானது. இதனால் கர்நாடகாவில் படத்தை திரையிட்டால் திரையரங்கங்கள் தீயிட்டு கொளுத்தப்படும் என்று சில கன்னட அமைப்புகள் பகிரங்கமாக எச்சரித்தனர். இதையடுத்து அங்கு தக் லைப் திரைப்படம் வெளியிடப்படவில்லை.இந்நிலையில் தக் லைப் திரைப்படம் திரையிடுவதற்கான அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பு வழங்க வேண்டும். திரைப்படம் வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று மகேஷ் ரெட்டி என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீது இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்த போது, சட்டத்தை கையில் எடுக்கக் கூடாது என கர்நாடக சேம்பரை கண்டித்தனர். அப்போது, வன்முறை கும்பல் மிரட்டியதன் காரணமாகவே படத்தை வெளியிடவில்லை என்று கர்நாடக பிலிம் சேம்பர் தெரிவித்தது. இதற்கு நீதிபதிகள், "அழுத்தத்துக்கு அடிபணிந்து படத்தை வெளியிடாமல் இருப்பதா?; போலீசிடம் செல்லாதது ஏன்? என காட்டமாக கேள்வி எழுப்பினர். மேலும் வன்முறை கும்பலின் பின்னால் ஒளிந்து கொண்டிருப்பதாக கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், " கமல் பேசியது அவதூறாக இருந்தால் அவதூறு வழக்குதான் தொடர்ந்திருக்க வேண்டும். கமல் மன்னிப்பு கேட்க வேண்டுமென்ற கேள்வி எங்கிருந்து எழுகிறது. ஒரு நகைச்சுவை நடிகர் ஏதாவதுகூறினால் கூட உணர்வுகள் புண்படுகின்றன எனக்கூறி நாசவேலைகள் நடக்கின்றன, நாம் எங்கே எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்?. நாளை இதே போன்று ஒரு நாடகத்துக்கு எதிராகவோ, கவிதைக்கு எதிராகவோ கும்பல்கள் மிரட்டல் விடுக்கக்கூடும். இதனை அனுமதிக்க முடியாது.‘தக் லைப்' திரைப்படம் வெளியிடுவதற்கு கர்நாடக அரசு முழு பாதுகாப்பை அளிக்க வேண்டும்; வன்முறைகள் ஏற்பட்டால் அரசு அடக்க வேண்டும், கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக படம் திரையிடுவதற்கு யாரேனும் தடையாக இருந்தால் அவர்கள் மீது கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகளை பதிவு செய்ய வேண்டும்."இவ்வாறு தெரிவித்தனர்.