சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் மநீம தலைவர் கமல்ஹாசன் இன்று காலை சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, பி.கே.சேகர்பாபு, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். சந்திப்புக்கு பின்னர் கமல்ஹாசன் அளித்த பேட்டி: முதல்வர் அழைத்தன் பெயரில் சந்தித்தேன். ராஜ்யசபாவில் நுழைவதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி எங்கள் கட்சியிடம் சொல்லியிருக்கிறார். நாங்கள் அதற்கான ஏற்பாடுகளையும், தேவையான தஸ்தாவேஜ்களையும் தயார் செய்து வைக்க வேண்டும் என்பதற்கான அறிவுரையையும் வழங்கினார்.
முன் அனுபவம் உள்ளவர்கள் எங்களுக்கு சொல்ல வேண்டிய அறிவுரைகளையும் சொன்னார்கள். கேட்டுக்கொண்டோம். எப்போது வேட்புமனு தாக்கல் செய்வது என்பதை அவர்கள் சொல்வார்கள். அதற்கான முன் ஏற்பாடுகளுக்காக தான் இங்கே வந்திருக்கிறோம். என் குரல், அந்த அவையில் தமிழ்நாட்டிற்காக பேச உள்ளேன். தமிழ்நாட்டிற்காக நான் எப்போதுமே பேசியிருக்கிறேன். நாட்டுக்கு தேவை என்பதால் வந்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.