சென்னை: கமல்ஹாசனுக்கு ஆதரவாக தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழிலிருந்துதான் கன்னடம் வந்தது என கமல்ஹாசன் பேசியதால், ‘தக் லைஃப்’ படத்தை கர்நாடகத்தில் திரையிட மாட்டோம் என கர்நாடக பிலிம் சேம்பர் தெரிவித்தது. இந்த நிலையில், கமல்ஹாசனுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், ‘‘நடிகர் கமல்ஹாசன் கன்னட மொழிக்கு எதிரானவர் போன்ற ஒரு மாயத் தோற்றத்தை சித்தரித்து அவதூறு பரப்புவது முற்றிலும் ஏற்கத்தக்கது அல்ல. கமல்ஹாசன் பேச்சை குறிப்பிட்ட ஒரு சிலர் தவறான அர்த்தத்தில் புரிந்து கொண்டு தவறான புரிதலை பரப்புகின்றனர். அதனால் தேவையற்ற சங்கடமான சூழலும், பதற்றமும் ஏற்படுகிறது. இந்திய மொழிகள் அனைத்திற்கும் உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என வலியுறுத்துபவர் நடிகர் கமல்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.