சென்னை: கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கான முகாம் அருகே, நேற்று காலை கடலில் மூங்கிலால் ஆன சிறிய கூம்பு கோபுரம் போன்று ஆளில்லா படகு ஒன்று மிதந்து வந்தது. இதை பார்த்த புதுப்பட்டினம் மீனவர்கள் சிலர், இது என்ன வித்தியாசமாக உள்ளதே என்று அந்த படகை டிராக்டர் மூலம் கயிறு கட்டி கரைக்கு இழுத்து வந்தனர். பின்னர், கல்பாக்கம் போலீசார் மற்றும் கடலோர காவல் படை, மீன்வளத் துறை உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மீனவர்கள் தகவல் தெரிவித்தனர்.
அதிகாரிகள் வந்து பார்த்து, இது எந்த நாட்டு படகு, எதற்காக வந்தது என்பது குறித்து ஆய்வு செய்தும் விசாரித்தும் வருகின்றனர். இது ஒருவேளை மியான்மர் அல்லது பர்மாவில் உள்ள புத்த துறவிகள் ஏதாவது பூஜை செய்து கடலில் விட்டார்களா அல்லது வேறு ஏதேனும் சதி செயல் காரணமா என்று தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். மேலும், இன்ஜின் இல்லாத இந்த படகின் சில பகுதிகள் துரு பிடித்தும், பாசி படர்ந்தும் உள்ளது என்பதால் நீண்ட நாட்களுக்கு முன்பு கடலில் விட்டிருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.
இந்த மர்ம படகு கரை ஒதுங்கிய அரை கிலோ மீட்டர் தூரத்தில் தான் கல்பாக்கம் அணுமின் நிலையம் இயங்கி வருகிறது, என்பதால் இங்கு வந்து கரை ஒதுங்கியது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த படகில் பாதியளவு மூங்கில் மற்றும் தகடால் ஆன 3 அடுக்கில் புத்தர் கோயில் போன்று அமைக்கப்பட்டும், அதன் உச்சியில் புத்த கொடியும் உள்ளது. மேலும், படகினுள் காவித் துணியில் சில அலங்காரமும் செய்யப்பட்டு புத்தர் படம் மற்றும் குடுவை (யாழி) ஆகியவையும் உள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியி்ல பரபரப்பை ஏற்படுத்தியது.