மதுரை: கோவிந்தா கோவிந்தா’ முழக்கம் விண்ணை முட்ட பக்தர்கள் புடைசூழ தங்கக் குதிரை வாகனத்தில், பச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர். இன்று அதிகாலை 6 மணி அளவில் மதுரை – ஆழ்வார்புரம் வைகை ஆற்றில் எழுந்தருளினார். இந்த நிகழ்வின்போது லட்சக்கணக்கான மக்கள் கள்ளழகரை தரிசித்து வழிபட்டனர்.
மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா மே 8-ல் தொடங்கியது. முதல் நாள், இரண்டாம் நாள் மாலையில் சுந்தரராஜ பெருமாள் தோளுக்கினியானில் எழுந்தருளினார். மூன்றாம் நாளான நேற்று முன்தினம் காலையில் தோளுக்கினியானில் சுந்தரராஜபெருமாள்திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார்.
பின்னர் கண்டாங்கி பட்டு உடுத்தி,நெற்றிப்பட்டை, கரங்களில்வளைத்தடி, நேரிக்கம்பு பரிவாரங்களடன் மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்க கள்ளழகர் திருக்கோலத்தில் தங்கப்பல்லக்கில் மதுரைக்குப் புறப்பட்டார். விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று அதிகாலை சித்திரா பவுர்ணமி நாளில் ஆழ்வார்புரம் வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர். காலை 7.25 மணியளவில் வையாளியாகி வீரராகவப் பெருமாளுக்கு மாலை சாற்றிவிட்டு அங்கிருந்து ராமராயர் மண்டகப்படிக்கு புறப்படுகிறார்.
அங்கு பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சி அடித்து கள்ளழகரை குளிர்விக்கின்றனர். இரவில் வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் தங்குகிறார். நாளை மே 13-ல் தேனூர் மண்டகப்படியில் மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்கிறார். அன்றிரவு ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதாரம் நடைபெறும்.
முன்னதாக, வழிநெடுகிலும் பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளினார் என்பது குறிப்பிடத்தக்கது. பக்தர்கள் ஆடிப்பாடி அழகரை வழிபட்டனர். சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மதுரை மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. பக்தர்கள் கூட்டம் கூட்டமாக மதுரை மாநகரை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.