ஊட்டி: ஊட்டி அருகேயுள்ள கல்லட்டி பகுதியில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான மாடம் முட்புதர்கள் சூழ்ந்து காணப்படுகிறது.இதனை சீரமைத்து சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்க வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்கா,ரோஜா பூங்கா மற்றும் தொட்டபெட்டா போன்ற சுற்றுலா தலங்களுக்கு செல்கின்றனர். இது தவிர வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு சூழல் சுற்றுலா மையங்களுக்கும் செல்கின்றனர். இதனால், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து சுற்றுலாத்தலங்களும் தற்போது உள்ளூர் மக்களை கொண்டு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஊட்டியில் இருந்து மசினகுடி செல்லும் சாலையில் கல்லட்டி சோதனை சாவடி அருகே வனத்துறை கட்டுப்பாட்டில் ஒரு சிறிய பூங்கா மற்றும் மாடம் இருந்தது. இதனை மசினகுடி செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் முதுமலையில் இருந்து ஊட்டி நோக்கி வரும் சுற்றுலா பயணிகள்,உள்ளூர் மக்கள் கண்டு ரசித்து சென்றனர். ஆனால், இந்த பூங்கா அருகே உள்ள நீர்வீழ்ச்சியில் அவ்வப்போது சிலர் விழுந்து உயிரிழப்பு ஏற்பட்டதால், இப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர்.
இந்நிலையில், இப்பகுதியில் உள்ள மாடம் முட்புதர்கள் சூழ்ந்து காணப்படுகிறது.அதேபோல், அங்கிருந்த பூங்காவும் முத்புதர்கள் வளர்ந்து காணப்படுகிறது. எனவே, இந்த மாடத்தை சீரமைத்தும், பூங்காவை சீரமைத்து சூழல் சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும். அதேசமயம், கல்லட்டி நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் செல்லாதவாறு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் கல்லட்டி பகுதிகளில் உள்ள உள்ளூர் மக்களின் வாழ்வாதரம் காக்கப்படும். மேலும், இப்பகுதியில் சூழல் சுற்றுலா மையம் அமைப்பதன் மூலம் வனத்துறைக்கும் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது என சுற்றுலா ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.