ஊட்டிக்குப் போறீங்களா? மறக்காம கல்லாறு தோட்டக் கலைப் பழப்பண்ணையை பார்த்துட்டு வாங்க. அப்படி அங்கு என்னதான் இருக்கு என்கிறீர்களா? நிறைய இருக்கு. இதோ லிஸ்ட்…
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு செல்லும் சாலையில் கல்லாறு பகுதியில் உள்ள முதல் கொண்டை ஊசி வளைவில் அமைந்திருக்கிறது அரசுத் தோட்டக்கலைப் பழப்பண்ணை. ஆங்கிலேயர்களால் கடந்த 1900ம் ஆண்டு அரசு உருவாக்கப்பட்ட தோட்டக்கலை பழப்பண்ணை 122 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. 8.92 ஹெக்டேர் (25 ஏக்கர்) பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் இந்தப் பண்ணையில் இயற்கை எழில் கொஞ்சி விளையாடும். சராசரியாக ஆண்டுதோறும் 70 முதல் 80 நாட்கள் வரை மொத்தமாக 130 செ.மீ. முதல் 140 செமீ வரை இப்பகுதியில் மழை பொழிகிறது. கடல் மட்டத்தில் இருந்து 360 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இப்பண்ணையின் சீதோஷ்ண நிலை மனதுக்கும்,
உடலுக்கும் இதமாக இருக்கும்.
மிதவெப்ப சீதோஷ்ண நிலை கொண்ட இந்தப் பழப்பண்ணையில் பாக்கு, சில்வர் ஓக், காபி நாற்றுகள், மலேசியாவை தாயகமாகக் கொண்ட மங்குஸ்தான், துரியன் பழம், ரம்புட்டான், லவங்கம், எலுமிச்சை, நெல்லிக்காய், வெல்வட் ஆப்பிள், பலா, மலேயன் ஆப்பிள் உள்ளிட்ட பல்வேறு வகையான பழ மரங்களும், கிராம்பு, மிளகு உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவிய பயிர்களும், அலங்காரச்செடி வகைகளான குரோட்டன்ஸ், செம்பருத்தி, இக்ஸோரா, பாக்கு நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.தற்போது கல்லாறு அரசு தோட்டக்கலைப் பண்ணையில் மொத்தமாக 2,29,250 நாற்றுக்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கின்றன. இதில் மங்குஸ்தான் – 940 நாற்றுக்கள் உள்ளன. ஒரு நாற்றின் விலை ரூ.50, ரம்புட்டான் – 2350 நாற்றுக்கள் உள்ளன. ஒரு நாற்றின் விலை ரூ.10. லிச்சி – 300 நாற்றுக்கள் (ரூ.10). சில்வர் ஓக் – 10 ஆயிரம் நாற்றுக்கள் (ரூ.80, பன்னீர் கொய்யா – 500 நாற்றுக்கள் (ரூ.10), காபி – 2000 நாற்றுக்கள் (ரூ.10), பலா – 1000 நாற்றுக்கள் (ரூ.10), ஜாதிக்காய் – 10 ஆயிரம் நாற்றுக்கள் (ரூ.20), மிளகு – 40 ஆயிரம் நாற்றுக்கள் (ரூ.12), எலுமிச்சை – 2500 நாற்றுக்கள் (ரூ.40), மொஹித் நகர் பாக்கு ரகம் – 1.20 லட்சம் நாற்றுக்கள், மங்களா பாக்கு ரகம் – 40 ஆயிரம் நாற்றுக்கள் (ரூ.20) என பல நாற்றுக்கள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன. தற்போது கல்லாறு அரசு பழப்பண்ணையில் வாரத்திற்கு குறைந்தபட்சம் 5 ஆயிரம் நாற்றுக்கள் வரை விற்பனையாகி வருகின்றன.
இதுதவிர பதனிடப்பட்ட பழப்பொருட்கள் (ஜாம்) இங்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஊட்டியில் விளையும் தரமான பழங்களைக் கொண்டு கலப்படம் இல்லாமல் தயாரிக்கப்படும் இந்த பொருட்கள் மிகுந்த சுவை கொண்டவை. குறிப்பாக இங்கு கிடைக்கும் ஜாம்கள் தோசை, சப்பாத்தி, பிரெட் உள்ளிட்ட பல டிபன் அயிட்டங்களுக்கு தோதாக இருக்கும். ஊட்டியில் தயாரிக்கப்பட்ட ஒரிஜினலான யூகலிப்டஸ் தைலமும் இங்கு கிடைக்கிறது. இதனால் ஊட்டிக்கு செல்பவர்கள் மட்டுமில்லை. மலைப்பயிர்கள் மற்றும் பழப்பயிர்களின் நாற்று வேண்டும் என விரும்புகிறவர்கள் தினமும் குடும்பத்தோடு இந்தப் பண்ணைக்கு வந்து செல்கிறார்கள். ஆனால் ஒரு கண்டிஷன்… நாற்று வாங்க வருபவர்களுக்கு மட்டுமே இங்கு அனுமதி. ஜாலியாக சுற்றிப் பார்க்கலாம் என்றால் நோ அனுமதி.
இயற்கையான பாசனம்
கல்லாறு பகுதியில் ஓர் ஆறு ஓடுகிறது. எப்போதும் ஓய்வின்றி ஓடிக்கொண்டிருக்கும் இந்த ஆற்றின் பெயர் கல்லாறு. இந்த ஆற்றின் பெயரால் இந்தப் பகுதிக்கும் கல்லாறு என பெயர் வைத்திருக்கிறார்கள். இந்த ஆறு, இந்த ஏரியா பெயரையே பழப்பண்ணைக்கும் சூட்டி இருக்கிறார்கள். இந்தப் பண்ணை சரிவாக (ஸ்லோப்) அமைந்திருப்பதால், கல்லாற்றின் நீரை அப்படியே எடுத்து பண்ணைக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள். பண்ணையை 32 பகுதிகளாப் பிரித்து கன்றுகள் வைத்திருக்கிறார்கள். இங்கு விளையும் பழங்களைக் கொண்டே விதை உற்பத்தி செய்து, கன்று உற்பத்தி செய்கிறார்கள். இந்தக் கன்றுகளுக்கும், மரங்களுக்கும் கல்லாறு நீர்தான் உயிர்நீர். இங்கு ஆழ்குழாய்க் கிணறுகள் எதுவும் கிடையாது. மேற்குத் தொடர்ச்சி மலையில் வசிக்கும் பல்வேறு பறவையினங்கள், விலங்கினங்களுக்கு எந்த தொந்தரவும் கொடுக்கக்கூடாது என்பதற்காக ஆழ்குழாய் போன்ற எந்த செயற்கை முயற்சிகளும் இங்கு முன்னெடுக்கப்படவில்லை என்கிறார்கள் தோட்டக்கலை அதிகாரிகள்.