கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் கைதான மேலும் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. ஷாகுல் ஹமீது, பென்சிலால், கதிரவன், சின்னதுரை ஆகிய 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏற்கெனவே மாதேஷ், சிவக்குமார், ஏழுமலை, ஜோசப் ஆகியோர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி சுமார் 60க்கும் மேற்பட்ட நபர்கள் உயிரிழந்த சம்பவத்தில் 22 பேர் கைது செய்யப்பட்டனர். கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் மற்றும் கச்சிராயபாளையம் ஆகிய 3 காவல் நிலைய வழக்குகளும், சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 22 நபர்களில் 17 பேர் மீது குண்டர் சட்ட நடவடிக்கை எடுக்க கோரி சிபிசிஐடி அதிகாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரை செய்திருந்தனர். இந்நிலையில் 2 தினங்களுக்கு முன் மாதேஷ், சிவகுமார், ஜோசப் மற்றும் ஏழுமலை ஆகிய முக்கிய நபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்த நிலையில் தற்போது மேலும் ஷாகுல் ஹமீது, பென்சிலால், கதிரவன், சின்னதுரை ஆகிய 4 நபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
மொத்தமாக இந்த வழக்கில் இதுவரை 8 நபர்களை குண்டர் சட்டத்தின் கீழ் சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். மீதமுள்ள நபர்களும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவர் எனவும் சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.