சென்னை: கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரண வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் மெத்தனால் கலந்த விஷச்சாராயம் குடித்து 70 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்புகள் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலைப்பகுதியில் சாராயம் தயாரித்து, விற்பனை செய்யப்படுவதாகவும், இதில் பலருக்கு தொடர்பு உள்ளதாகவும், எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. விஷசாராயம் மரணம் தொடர்பான வழக்கை காவல்துறை விசாரித்தால் நியாயமாக இருக்காது. அதனால் சி.பி..ஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பா.ம.க., அ.தி.மு.க., பா.ஜ.க. வழக்கறிஞர்கள், இரு முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தனித்தனியாக வழக்கு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்குகளை நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பி.பாலாஜி ஆகியோர் கொண்ட சிறப்பு டிவிசன் பெஞ்ச் விசாரித்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர். இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் டி. கிருஷ்ணகுமார், பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று வழங்கியுள்ளது. அதில், கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்து உத்தரவிடப்படுகிறது. இதில் எவ்வித குறுக்கீடும் இருக்கக் கூடாது. இந்த வழக்கை சிஐபி அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விசாரணைக்காக மாநில காவல்துறையினர் தங்களிடம் உள்ள ஆவணங்களை சிஐபி அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.