கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஓட்சா ஊராட்சி பணியாளர்கள் சங்கத்தினர் 7 அம்ச கோரிக்கை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாபட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சென்னை ஓட்சா கூட்டமைப்பு தலைவர் அமல்ராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்தை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
அப்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சில கிராம ஊராட்சிகளில் பணியாற்றி வரும் சுகாதார ஊக்குநர்களுக்கு தொகுப்பூதியம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் நிர்வாகிகள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதில் உடன்பாடு எட்டபடாததால் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தியதையடுத்து நிர்வாகிகளை போலீசார் வெளியேற்றினர்.
இதனால் ஆத்திரமடைந்த நிர்வாகிகள் சென்னை ஓட்சா கூட்டமைப்பு தலைவர் அமல்ராஜ் தலைமையில் 100 க்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கள்ளக்குறிச்சி-கச்சிராயபாளையம் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதனை ஏற்க மறுத்து தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட நிர்வாகிகளை போலீசார் அதிரடியாக வெளியேற்றினர். அதனையடுத்து மற்ற நிர்வாகிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.