*துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காலங்களில் முன்னெச்சரிக்கை, மீட்பு நடவடிக்கைகளை துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அறிவுறுத்தி உள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் தென்மேற்கு பருவமழை-2025 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மழைக்காலங்களில் மழை பாதிப்புகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறை எண் 04141-228801 என்ற எண்ணில் தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுவதுடன், 1077 என்ற எண்ணிலும் தகவல் தெரிவிக்கலாம்.
மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பேரிடர் காலங்களில் அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்கள் மற்றும் குறைவான பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்கள் என முன்பே கண்டறியப்பட்டுள்ள இடங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், தாழ்வான பகுதிகளில் உள்ள கிராமங்களை தொடர்ந்து கண்காணிக்கவும் மற்றும் மழைக்காலங்களில் பாதிக்கக்கூடிய கிராமங்களில் பேரிடர் ஒத்திகை தொடர்பான பயிற்சிகள் நடத்தி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அறிவுறுத்தினார்.
இதேபோன்று மழைக் காலங்களில் பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து தற்காலிக நிவாரண மையங்களை முழுமையாக தணிக்கை செய்து அனைத்து வசதிகளுடன் தற்காலிக நிவாரண முகாம்கள் இருப்பதை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உறுதி செய்வதுடன் மழைநீர் தேங்கக்கூடிய பகுதிகளை கண்டறிந்து மழைநீர் தங்கு தடையின்றி செல்ல உரிய வழிவகை ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது.
இதன் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழைக்காலங்களில் பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கைகளை அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜீவா, திருக்கோவிலூர் உதவி ஆட்சியர் ஆனந்த்குமார்சிங், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தனலட்சுமி, கள்ளக்குறிச்சி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் மற்றும் அனைத்து மாவட்ட நிலை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.