ஆலந்தூர்: கீழ்கட்டளை கல்குட்டையில் தவறி விழுந்த பிளம்பர் பரிதாபமாக பலியானார். திருநெல்வேலி சங்கரன்கோவில் குருவிகுளம் பகுதியை சேர்ந்தவர் மாடசாமி (44). இவர் கோயம்பேட்டில் தனது அண்ணன் மகன் தங்கராஜ் என்பவருடன் தங்கி, பிளம்பிங் தொழில் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் மாடசாமி நேற்று முன்தினம் கீழ்கட்டளை அன்பு நகரில் உள்ள ஒரு பிஸ்கட் கம்பெனியில் பழுதடைந்த குடிநீர் குழாய் இணைப்புகளை சரி செய்வதற்காக சரவணன் என்பவரும் வந்துள்ளார்.
பின்னர் மாலை பணி முடிந்தும் மாடசாமி அருகில் உள்ள கீழ்கட்டளை கல்குட்டை அருகே இயற்கை உபாதையை கழித்து விட்டு வருவதாக சரவணனிடம் சொல்லி விட்டு சென்றார். ஆனால், திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த சரவணன், கல்குட்டை அருகே சென்று அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரித்தார்.
அப்போது மாடசாமி அவரது சட்டை மற்றும் தொலைபேசியை கரையில் வைத்து விட்டு கால்களை கழுவ கல்குட்டையில் இறங்கியபோது தவறி உள்ளே விழுந்ததும், அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ்சை வரவழைத்து பரிசோதனை செய்த போது மாடசாமி இறந்தது தெரிந்தது. இதையடுத்து, அவரது உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து மடிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.