*பள்ளி மாணவர்கள் உயிர் தப்பினர்
அருமனை : திற்பரப்பு பகுதியில் இருந்து டாரஸ் லாரி ஒன்று நேற்று முன்தினம் மாலை சுமார் 4 மணியளவில் களியல் ஜங்சன் பகுதி அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தறிகெட்டு ஓடியது. பின்னர் சாலையோரம் இருந்த பயணிகள் நிழற்குடை மீது பயங்கரமாக மோதி நின்றது.மோதிய வேகத்தில் பயணிகள் நிழற்குடையின் மேற்கூரை சேதமானது. மேலும் அதன் பக்க சுவரில் விரிசல் ஏற்பட்டது. அந்த நேரத்தில் பயணிகள் நிழற்குடையின் உள்ளே அமர்ந்திருந்த பள்ளி மாணவர்கள் அலறியடித்தவாறு வெளியே ஓடி வந்தனர். அதற்குள் லாரி டிரைவர் லாரியை எடுத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டார்.
எப்போதும் இந்த பயணிகள் நிழற்குடையின் வெளியேதான் பயணிகள் நிற்பார்கள். அதிர்ஷ்டவசமாக, பயணிகள் யாரும் வெளியே நிற்காததால் எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை. நேற்று முன்தினம் விடுமுறை நாள் என்பதால், சிறப்பு வகுப்பிற்கு வந்த மாணவர்கள் மட்டுமே பயணிகள் நிழற்குடையின் உள்ளே இருந்தனர். அவர்கள் வெளியே நின்றிருந்தால் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும்.
இதுகுறித்து தகவலறிந்ததும் அருமனை போலீசார் அங்கு விரைந்து வந்தனர். மேலும் விபத்து ஏற்படுத்திய டாரஸ் லாரியை போலீசார் தேடி சென்றபோது, விபத்து நடந்த பகுதியில் இருந்து சுமார் இரண்டரை கிலோ மீட்டர் தொலைவில் கட்டச்சல் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் ஓட்டுனர் தப்பி சென்றுவிட்டார்.
இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த போலீசார், அதன் உரிமையாளரை தொடர்புகொண்டு விபத்து குறித்து தகவல் கொடுத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேதமான பயணிகள் நிழற்குடையை மீண்டும் சீரமைக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.