கனடா : காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் கொலை விவகாரத்தில் இந்தியாவும் கனடாவும் இணைந்து செயல்பட வேண்டும் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ அழைப்பு விடுத்துள்ளார். கனடாவில் கடந்த ஜூன் மாதம் காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜார் கொலம்பியாவின் சர்ரேயில் உள்ள சீக்கிய கலாச்சார மையத்திற்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் இந்திய உளவாளிகளுக்கு தொடர்பு இருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டி இருந்தார்.
இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, கனடாவின் வின்னிபெக் நகரில், பஞ்சாபில் தேடப்பட்டு வரும் மற்றொரு காலிஸ்தான் தீவிரவாதியான சுக்தூல் சிங் என்ற சுக்கா துன்கே மர்மநபர்களால் சுட்டு கொல்லப்பட்டார்.இந்த நிலையில் இந்த விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும் வகையில் கனடாவிற்கு இந்தியா ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமே என கனடா பிரதமர் வலியுறுத்தி உள்ளார்.
மேலும் பேசிய அவர், “இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடியை நேரடியாக தொடர்பு கொண்டு பேசினேன்.அப்போது வெளிப்படையாக சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டேன்.இந்த விவகாரத்தை இந்தியா தீவிரமாக அணுகி, வெளிப்படைத்தன்மை, நம்பகத்தன்மை மற்றும் நீதி கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.”என்றார்.முன்னதாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் அறிந்தம் பாக்சி, காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் கொலை விவகாரத்தை கையாள்வதில் கனடா பாரபட்சமாக செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.