சீமானுக்கும், காளியம்மாளுக்கும் இடையிலான பனிப்போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பிரசாரத்துக்கு கூட, காளியம்மாள் செல்லவில்லை. கட்சி நிகழ்ச்சிகளில் இருந்து ஒதுங்கியே அவர் இருந்து வருகிறார். அவர் கட்சியில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளார். இந்தநிலையில், மதுரையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று அளித்த பேட்டி: நாம் தமிழர் கட்சிக்குள் முழு சுதந்திரம் இருக்கிறது. இருந்து இயங்குவதற்கும், விரும்பம் இல்லை என்றால் வெளியேறுவதற்கும் முழு சுதந்திரம் இருக்கிறது. இது ஒரு ஜனநாயக அமைப்பு.
முதலில் சமூக செயற்பாட்டாளராக தான் தங்கச்சி(காளிம்மாள்) இருந்தாங்க. அவங்களை அழைத்து வந்தது நான் தான். வரும் போது வாங்க, வாங்க. வணக்கம். ரொம்ப நன்றி என்று சொல்லுவோம். போறதாக இருந்தால் போங்க. ரொம்ப, ரொம்ப நன்றி, வாழ்த்துகள் என்று சொல்வோம். இது எங்கள் கட்சிக்கு களையுதிர் காலம். தங்கச்சிக்கு முழு உரிமை இருக்கிறது. கட்சியில் இருப்பதா, அல்லது கட்சியை விட்டு போய் வேறு இடத்தில் இயங்குவதா என்று முடிவு எடுக்கும் உரிமை அவங்களுக்கு இருக்கிறது. அதில் ஒன்றும் கருத்து சொல்ல முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.