கலசப்பாக்கம்: கலசப்பாக்கம் ஒன்றியத்தில் உள்ள பெரும்பாலான கிராமங்கள் செய்யாற்றின் கரையோரம் அமைந்துள்ளது. இப்பகுதி கிராமங்கள் மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளம் மற்றும் மிருகண்டா அணையில் இருந்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திறந்த தண்ணீர் செய்யாற்றில் கரையை கடந்து செல்லும்போது கிராமங்களை சூழ்ந்து கொண்டது. இதில் இப்பகுதி மக்கள் சிக்கிக் கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்த அப்போதைய கலெக்டர் பா. முருகேஷ் எம்பி சி.என்.அண்ணாதுரை, எம்.எல்.ஏ பெ.சு.தி சரவணன் அப்போதைய கூடுதல் கலெக்டர் பிரதாப் மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி சிறப்பு முகாம்களில் தங்க வைத்தனர். சிறுவள்ளூர் காந்தபாளையம், வெங்கட்டம் பாளையம் ஆகிய கிராமங்களில் பெய்த பலத்த மழையில் தரை பாலங்கள் அடித்து செல்லப்பட்டன.
உடனடியாக தற்காலிக பாலங்கள் அமைக்கப்பட்டன. நிரந்தரமாக உயர்மட்ட பாலம் கட்டித் தர வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கையை எம்பி சி.என் அண்ணாதுரை எம்எல்ஏ பெ.சு.தி சரவணன் ஆகியோர் அமைச்சர் எ.வ வேலுவிடம் தெரிவித்தனர். அதன் பேரில் 3 இடங்களில் உயர்மட்ட மேம்பாலங்கள் கட்டப்பட்டது. பணிகள் முடிந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மேம்பாலங்கள் திறக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 11 ம் தேதி தொடர் மழையால் மிருகண்டா அணை திறக்கப்பட்டது. இதிலிருந்து தண்ணீர் வெளியேறி செய்யாற்றில் சென்றது. ஆனால் காந்தபாளையம் வெங்கட்டம் பாளையம், சிறுவள்ளூர் கிராமங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளதால் இந்த கிராமங்கள் வெள்ள அபாயத்திலிருந்து தப்பியது. மேலும் நேற்று தொடர் மழை காரணமாக மிருகண்டா அணை திறக்கப்பட்டது.
மிருகண்டா அணை குறுக்கே உயர் மட்ட பாலங்கள் கட்டப்பட்டுள்ளதால் கட்டப்பட்டுள்ள உயர் மட்ட மேம்பாலத்தின் கீழ் வெள்ளம் பாய்ந்து ஓடியது. தொடர்ந்து இப்பகுதியில் மழை நீடித்து வருகிறது. உயர் மட்ட பாலங்கள் இல்லாமல் இருந்திருந்தால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கிராமங்களுக்குள் தண்ணீர் சூழ்ந்த நிலை உருவாகி இருக்கும். தற்போது பொதுமக்கள் வெள்ள அபாயத்திலிருந்து தப்பினர். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.