குன்றத்தூர்: ஆடி மாதம் அம்மனின் திரு நட்சத்திரமான பூரம் தினத்தை முன்னிட்டு, மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலில் 1008 கலச அபிஷேகம் நேற்று நடைபெற்றது. முன்னதாக, நேற்று முன்தினம் காலை கோயில் வளாகத்தில் 1008 கலசம் ஸ்தாபிதம் செய்து, நேற்று மாலை முதல் கால பூஜை, 2ம் கால மற்றும் 3ம் கால பூஜை நடந்தது. அதனைத்தொடர்ந்து, கோயில் வளாகத்தில் 1008 கலசங்கள் வைத்து சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. கலசங்களுக்கு முன்பு யாகசாலை வளர்த்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர், அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.
இதில், சென்னை மட்டுமின்றி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர். இதனிடையே குன்றத்தூரில் பிரசித்திபெற்ற பொன்னியம்மன் கோயில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் வரும் பூரம் நட்சத்திரத்தில் அம்மனுக்கு ஆடிப்பூரம் விழா கோலாகலமாக நடைபெறும். அந்த வகையில், இக்கோயிலில் ஆடிப்பூரம் விழா நேற்று வெகுசிறப்பாக நடைபெற்றது. இதில், பக்தர்கள் விரதமிருந்து பால்குடம் எடுத்து சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக, நேற்று காலை குன்றத்தூரில் உள்ள திருநாகேஸ்வர் கோயிலில் இருந்து பால்குடம் எடுத்து ஊர்வலம் தொடங்கியது.
இதில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். அதனைதொடர்ந்து, 1508க்கும் மேற்பட்ட பெண்கள் தலையில் பால் குடங்களை சுமந்து கொண்டு கோயிலை சுற்றியுள்ள சன்னதி தெரு, பெரிய தெரு, சின்ன தெரு, துலுக்க தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பால்குடங்களை தலையில் சுமந்தவாறு சென்றனர். பின்னர், பக்தர்கள் எடுத்து வந்த பால்குடங்களில் இருந்த பாலை அம்மனுக்கு ஊற்றி பாலபிஷேகம் செய்யப்பட்டது.
இதில், குன்றத்தூர் மட்டுமின்றி, சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தந்திருந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு குன்றத்தூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பால்குடம் எடுத்து வந்த பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் சார்பில் இலவச நீர், மோர் வழங்கப்பட்டது.