Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

நிலத்தடி நீராதாரமாக திகழும் களக்காடு குடிதாங்கி குளத்தில் கழிவுநீர் கலப்பால் சுகாதார சீர்கேடு

*துர்நாற்றம் வீசுவதால் நோய்கள் பரவும் அபாயம்

களக்காடு : களக்காடு குடிதாங்கி குளத்தில் கழிவுநீர் கலப்பதால், துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, நோய்கள் பரவும் அபாயம் நிலவுகிறது. களக்காடு புதிய பஸ் நிலையம் அருகே குடிதாங்கி குளம் உள்ளது.

கோட்டை, வியாசராஜபுரம், அண்ணா சாலை மற்றும் சுற்றுவட்டார பகுதியின் முக்கிய நிலத்தடி நீராதாரமாக திகழும் குடிதாங்கி குளத்திற்கு உப்பாற்றின் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த குளத்தின் மூலம் 50 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று

வருகின்றன.

இந்நிலையில் குடிதாங்கிகுளம் நீண்ட காலமாக தூர்வாரப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் குளத்தில் செடிகள் நிறைந்து காணப்படுகிறது. குளத்தின் நீர் பிடிப்பு பகுதிகளில் மண் மேடுகளும் உருவாகியுள்ளன. மேலும் அப்பகுதியில் உள்ள சாக்கடை மற்றும் கழிவுநீரும் குடிதாங்கிகுளத்தில் கலப்பதால் குளம், சாக்கடை குளமாக மாறி காட்சி அளிக்கிறது.

அத்துடன் குப்பைகளும் குளத்தில் கொட்டப்பட்டு வருகிறது. தற்போது களக்காடு பகுதியில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. மழையை தொடர்ந்து குளங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

ஆனால் குடிதாங்கிகுளத்திற்கு மட்டும் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதனைதொடர்ந்து குளம் நிரம்பாமல் நீரின்றி வறண்டு காட்சியளிக்கிறது. குளத்தில் தண்ணீருக்கு பதில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதிலிருந்து துர்நாற்றம் வீசுவதால் அருகில் உள்ள கடை வியாபாரிகள், குடியிருப்பு வாசிகள் கடும் பாதிப்படைந்துள்ளனர்.

இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, நோய்கள் பரவும் அபாய நிலை நிலவுகிறது. இதுபோல குளத்திற்கு தண்ணீர் வரும் கால்வாயும் சாக்கடை மயமாகி விட்டதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே குளத்தில் தேங்கி நிற்கும் சாக்கடை கழிவுகளை அகற்றி குளத்தை தூர் வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குளத்தில் நீர் நிரப்பவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

நடைபாதை அமைக்க எதிர்ப்பு

களக்காடு நகராட்சி சார்பில் குடிதாங்கிகுளத்தில் ரூ.54 லட்சத்தில் நடைபாதை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிகிறது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுபற்றி மனிதநேய மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் சித்திக் அஸிஸூர் ரஹ்மான் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மற்றும் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனுவில் ‘நடைபாதை அமைத்தால் குளத்தில் நீர் தேங்காமல் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்படையும், குளத்தில் வாழும் வெளிநாடு, உள்நாட்டு பறவைகளும் அழிந்து விடும். எனவே குளத்தில் நடைபாதை அமைக்கக்கூடாது” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.