தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் திருக்குறுங்குடியில் இருந்து கடையம் வரை 895 சதுர கி.மீ. பரப்பளவில் இந்தியாவின் 17வதுப் புலிகள் காப்பகமாகக் களக்காடு முண்டந்துறை அமைந்துள்ளது. இது தமிழ்நாட்டின் இரண்டாவதுப் பெரிய காப்பகம் ஆகும். பல்லுயிர்ப் பெருக்கத்திற்குப் புகழ்பெற்ற இந்தச் சரணாலயத்தில் புலிகளைத் தவிரச் சிறுத்தைகள், நரிகள், கழுதைப்புலிகள், காட்டுப்பூனைகள், பலதரப்பட்ட குரங்குகள், கடம்ப மான்கள், மான்கள், மிளா, யானை போன்ற விலங்கினங்கள் மற்றும் உலகில் வேறெங்கும் இல்லாத தாவர வகைகளும் உள்ளன.1962ம் ஆண்டு, களக்காடுபுலிகள் சரணாலயமும்(251 சதுர கிலோ மீட்டர்கள்), முண்டந்துறைப் புலிகள் சரணாலயமும்(567 சதுர கிலோமீட்டர்கள்) உருவாக்கப்பட்டன. 1988ம் ஆண்டில், இந்த இரு சரணாலயங்களையும் ஒன்றிணைத்து இக்காப்பகம் உருவாக்கப்பட்டது. 1996ம் ஆண்டு, இக்காப்பகத்துடன் கன்னியாகுமரி மாவட்டத்தை ஒட்டியுள்ள வீரப்புலி, கீழமலை ஆகிய பாதுகாக்கப்பட்ட வனங்களில் உள்ள குறிப்பிட்ட(77 சதுர கிலோமீட்டர்கள்) பகுதிகளையும் இணைக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
காடுகளைப் பாதுகாப் அமைக்கப்பட்டுள்ளன. புலிகள் காப்பகத்தில், மக்களுடன் கூடிய வனப்பாதுகாப்புத் திட்டமான சூழல் மேம்பாட்டுத் திட்டம், கடந்த 1995ம் ஆண்டு உலக வங்கியினால் தொடங்கப்பட்டுச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. மக்களுடன் ஒருங்கிணைந்து காடுகள் பாதுகாப்பில்(the ‘Best coexistence and buffer zone management’) முக்கியப் பணியாற்றியதற்காக, இக்காப்பகத்திற்குத் தேசியப் புலிகள் ஆணையத்தின்(National Tiger Conservation Authority (NTCA)) சிறந்த விருது கிடைத்துள்ளது. 1970களில் தாமிரபரணி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் லட்சக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டன. இதனால் வற்றாத ஜீவநதி என்று பெயர்பெற்ற தாமிரபரணி ஆறு 1980களில் வறண்டது. இதன் பிறகு தாமிரபரணிக்கு நீர் வழங்கும் காடுகளின் முக்கியத்துவத்தை உணர்ந்த அன்றைய அரசு களக்காடு முண்டந்துறைப் புலிகள் காப்பகத்தை அறிவித்தது.
இங்குள்ளக் காட்டை மேம்படுத்த உலக வங்கி உதவியுடன் திட்டங்கள் வகுத்துச் செயல்பட்டது. இதன் பிறகு இப்பகுதியின் காடு உயிர்பெற்றது. இதன் விளைவாக 1946ல் இருந்து 1990 வரை தாமிரபரணி அணைக்குச் சராசரியாக 13000 கன அடியாக இருந்த நீர்வரத்துப் புலிகள் காப்பகம் உருவானதால் காட்டின் தரம் மேம்பட்டு 1990க்குப் பிறகு மழையளவு கூடி அணைக்கு வந்தச் சராசரி நீர்வரத்தானது 26000 கன அடியாக அதிகரித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. வனத்துறையிடம் அனுமதிப் பெற்று இங்கு மலையேற்றத்தில் ஈடுபடலாம். அனைத்துத் தினங்களிலும் பார்வை நேரமாக காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். புலிகள் காப்பகத்தைப் பார்வையிடச் செப்டம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரைச் சிறந்த பருவமாகும். முண்டந்துறை மற்றும் தலையணை வனப்பகுதியில் தங்குமிடங்கள் உள்ளன. களக்காடு முண்டந்துறைப் புலிகள் காப்பகம் மாணவர்கள் மட்டுமல்ல அனைவரும் வந்து பார்க்க வேண்டிய சுற்றுலாத்தலமாகும்.