சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் முதற்கட்ட முகாமில் 79.66 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக இரண்டாம் கட்ட முகாம்கள் இன்று தொடங்கியது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை தமிழக அரசின் மூலம் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் 15ம்தேதி தொடங்கி வைக்கிறார். இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஒரு கோடி குடும்ப தலைவிகளுக்கு முதல் கட்டமாக ரூ.1000 வழங்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பப் படிவங்கள் கடந்த மாதம் 20ம் தேதி முதல் ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் வீடு வீடாக வழங்கப்பட்டன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செயலி மூலம் பதிவு செய்வதற்கான முதல் கட்ட பணிகள் முடிந்துள்ளன.இதுவரை முதற்கட்ட முகாமில் 79.66 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
2ம் கட்ட விண்ணப்பப் படிவங்கள் வழங்கும் பணி கடந்த 1ம் தேதி தொடங்கி நடைபெற்றது. இந்த நிலையில், உரிமைத் தொகை திட்டத்திற்கான 2ம் கட்ட விண்ணப்பப் பதிவு இன்று தொடங்கியது. இரண்டாம் கட்ட முகாம்கள் இன்று முதல் வரும் 16ம் தேதி வரை நடைபெற உள்ளன.இதனிடையே பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதற்கான மென்பொருள் உதவியுடன் சரிபார்க்கும் பணி வரும் 6ம் தேதி தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் தகுதியான குடும்பத் தலைவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல் மாதம் தோறும் ரூ.1000 உரிமை தொகை வழங்கப்படும்.